ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை ஒப்புதல்

அமெரிக்கா கொடுத்த நெருக்கடி காரணமாக இங்கிலாந்தின் ஈக்வடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே 2019-ல் கைது செய்யப்பட்டார்.

அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம் என கடந்த ஆண்டு இறுதியில் இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், உளவு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதற்கான உத்தரவில் இங்கிலாந்து உள்துறை செயலாளர் பிரீத்தி படேல் கையெழுத்திட்டுள்ளதாக உள்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

 

Malaimalar