உக்ரைனுடன் துணை நிற்போம் – இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி

உக்ரைன் நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷியா போர் தொடுத்த பிறகு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2வது முறையாக உக்ரைன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு எதிரான ரஷிய படைகளின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷிய படை வீரர்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர். இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர்.

இந்தப் போரில் ரஷியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ரஷியாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்கள் வெளியேறி வருகின்றன.

இதற்கிடையே, இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷியாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால் அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும். ரஷியாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்துள்ளனர் என தெரியவந்ததாக தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உக்ரைன் ராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை இங்கிலாந்து வழங்க இருக்கிறது. உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

 

Malaimalar