ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது. என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது. ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது.
மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் வேகமாக பரவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒமைக்ரான் வைரசால் பல நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இந்த நிலையில் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட ஒமைக்ரான் நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் கிங்ஸ் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கூறியிருப்பதாவது:- இங்கிலாந்தில் டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றுக்கு பிறகு நீண்ட கால கொரோனா பாதிப்பு உருவாவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைவாக இருக்கிறது. என்றாலும் அது தடுப்பூசியை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இது நோயாளியின் வயது மற்றும் கடைசி தடுப்பூசி செலுத்திய நேரத்தை பொறுத்து மாறுபடும். ஒமைக்ரான் பாதிப்புக்கு பிறகு நீண்ட கால அறிகுறிகளின் ஆபத்து டெல்டாவை விட குறைவாக இருக்கிறது.
2021-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2022-ம் ஆண்டு மார்ச் வரை ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது நோய் பாதிப்புக்கு உள்ளான 56,003 பேரில் 4.5 சதவீதம் பேர் நீண்ட கால பாதிப்பை பதிவு செய்து உள்ளனர்.
டெல்டா வைரஸ் அலையின்போது (2021 ஜூன் முதல் நவம்பர் வரை) 41,361 பேரில் 10.8 சதவீதம் பேர் நீண்ட கால கொரோனா அறிகுறிகளுடன் இருந்து உள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சியாளர் டாக்டர் கிளாரி ஸ்டீவ்ஸ் கூறும்போது, ஒமைக்ரான் வைரசால் நீண்ட கால பாதிப்பு இருக்கும் வாய்ப்பு குறைவு என்றாலும் அதற்கான சிகிச்சைகளை நீக்கி விட கூடாது என்றார்.
Malaimalar