[ஜீவி காத்தையா]
“ஐயா, இந்திய சமூகம் உமது நல்ல நடவடிக்கைகள், நல்ல அறிவிப்புகள் மற்றும் நல்ல திட்டங்கள் ஆகியவற்றுக்காகக் காத்திருக்கிறது”, என்ற வகையில் பிரதமர் நஜிப்பை பாரிசான் ஆளுங்கூட்டணியின் பங்காளியான மஇகாவின் தலைவர் ஜி.பழனிவேல் அக்கட்சியின் 65 ஆவது பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் வேண்டிக்கொண்டார்.
“அம்னோவிடம் கையேந்தி நிற்பதைத் தொழிலாகக் கொண்ட கூட்டத்தின் தலைவா! உமது உள்ளக்கிடக்கையை யாம் அறிவோம். இதோ எமது நல்ல அறிவிப்பு: நீ அமைச்சராவாய்”,
“உமது இந்திய சமூகம். இதென்ன வேண்டுகோள்? கடந்த 54 ஆண்டுகளாக உமது சமூகத்தை எங்கு வைக்க வேண்டுமோ, அங்கே வைத்துள்ளோம். இதை நன்கு அறிந்தவன் நீ. ‘இந்திய சமூகம் ஓரங்கட்டப்பட்டு விட்டது. அதில் சந்தேகமே இல்லை’ என்று கூறிய பெருமை உன்னைச் சார்ந்ததன்றோ!
மேலிருப்பவை அனைத்தும் மஇகா மாநாட்டில் எதிரொலித்த தலைவர்களின் கூற்றுகளுக்கு உண்மையான மனசாட்சியின் எதிர்குரலாகக் கொள்ளலாம்.
மஇகா மாநாட்டில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்ட நாள் “ஒரு வரலாற்றுப்பூர்வமான நாள்” என்று மஇகா தலைவர் ஜி.பழனிவேல் பெருமைப்பட்டுக் கொண்டார். அவரைப் பொறுத்தவரையில் அந்நாள் வரலாற்றுப்பூர்வமான நாள்தான். ஏனென்றால், அவர் அமைச்சராக்கப்பட்டார்.
மஇகா பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொள்ளும் இந்தியர்களுக்கும் அவர்களின் மேம்பாட்டிற்கு உதவிகள் வழங்குவோம் என்று கூறிக்கொள்ளும் அம்னோ அரசாங்கத்திற்கும் அந்நாள் ஒரு வரலாற்றுப்பூர்வமான நாள்தான். ஏனென்றால், மலாய்க்காரர்களுக்குக் கொடுக்கப்படுவதுபோல் இந்தியர்களுக்கு எதுவும் கிடைக்காது; மலாய்க்காரர்களின் மேம்பாட்டிற்கு உதவுவதுபோல் அம்னோ அரசாங்கம் இந்தியர்களுக்கு எதுவும் செய்யாது என்ற மலேசியா அரசாங்கத்தின் 54 ஆண்டுகால வரலாறு மீண்டும் உறுதி செய்யப்பட்ட அந்நாள் வரலாற்றுப்பூர்வமான நாளாகத்தான் இருக்க வேண்டும்.
மலாய்க்காரர்களைப்போல் இந்தியர்களும் இந்நாட்டின் குடிமக்கள். இந்தியர்களின் வாக்குகள் வேண்டுமென்றால், மலாய்க்காரர்களுக்காக அமல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு செயல் திட்டம் (Affirmative action) போன்ற திட்டம் இந்தியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று அன்றும் கோரவில்லை, இன்றும் கோரவில்லை. மாறாக, “ஐயா, பாத்துப் போடுங்கள்” என்ற ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பல்லவியை புதிய தலைவர் பழனிவேல் தலைமையிலும் வெற்றிகரமாக நிலைநிறுத்தி இருப்பது ஒரு வரலாற்றுப்பூர்வமான சாதனைதானே!
வெள்ளைக்காரன் இந்தியர் களை கழுதை என்று வர்ணித் திருக்கிறான். அம்னோக்காரன் அந்தக் கழுதையை மஇகாவை வைத்து கட்டெறும்பாக்கி விட்டான்.
வெப்பமண்டல நாடான மலாயாவின் காட்டை தங்களு டைய வெறுங்கைகளைக் கொண்டே அழித்து இந்நாட்டை செல்வம் கொழிக்கும் நாடாக் கியவர்கள் இந்தியர்கள். மலாயா சுதந்திரம் அடைந்த 1957 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த வருமானம் $180 மில்லியன். அதில் 68 விழுக்காடு தோட்டத் தொழிலிருந்து வந்ததாகும். இந்தியர்களின் உழைப்பிலிருந்து வந்ததாகும்.
சுதந்திர மலேசியாவில் நாட்டின் வளம் அனைத்து மக்களுக்கும் சமச்சீராக வழங்கப்படும் என்று கூறாத பிரதமரே இல்லை, மகாதீரை தவிர. இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் என்ன கொடுக்கப்படும் என்பது முன்னதாகவே முடிவெடுக்கப்பட்டு விட்டதால், புதிதாக எதுவும் கேட்பதற்கு இடமில்லை என்று மஇகா மற்றும் மசீச மாநாடுகளில் அவர் பச்சையாக கூறிவிட்டார். இருந்தும், மஇகா தலைவர் மகாதீரை மகா தீரர் என்று புகழ்ந்தார்!
“நீர் இன்று மட்டுமல்ல, என்றுமே எங்களின் தலைவர்” என்று மஇகாவால் வணங்கப்பட்ட படாவி படுமோசமானவர். இந்தியர்களின் சொத்து டமையை 3 விழுக்காட்டிற்கு உயர்த்துவதற்கு அரசாங்கத்தின் உதவி பற்றி செனட் அவையில் கேள்வி எழுப்பிய மஇகா செனட்டருக்கு பதில் அளித்த படாவி “அது இந்திய சமூகத்தைப் பொறுத்த விசயம்” என்றார்.
இன்று தெருத் தெருவாகச் சென்று தோசையும் வடையும் சப்பாத்தியும் போட்டு இந்தியர்களுடன் “அணுக்கமாக இருந்து உங்களின் தேவைகள் என்ன என்பதை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க முயன்று வருகிறேன்” என்று இந்த ஏப்ரலில்தான் நஜீப் இந்திய கால்வருடிகளிடம் கூறினார். இந்திய சமூகம் பின்தள்ளப்படாது என்றும் கூறினார். ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு ஜூலை 30 இல் முதலில் இந்தியர்களின் வாக்குகள் வரட்டும், பிறகு கொடுப்போம் என்று நஜீப் அறிவித்தார். இது என்ன வாக்களிப்பவர்களுக்கு மட்டுமான அரசாங்கமா?
கடந்த 50 ஆண்டுகளில் கங்கை நதியின் நீர் மட்டம் குறைந்ததுண்டு. ஆனால் பாரிசானுக்கான இந்நாட்டு இந்தியர்களின் ஆதரவு குறைந்த தில்லை. கங்கையில் மூழ்கினால், புனிதம். பாரிசானுக்கு வாக்களித்தால், அழிவு. இதோ, இந்தியர்களின் அன்றைய, இன்றைய நிலை குறித்து சிவமுருகன் பாண்டியன் அளிக்கும் மிகச் சுருக்கமான புள்ளி விவரம்:
“1958 இல் பொருளாதாரத்தில் 28% இப்போது 1.1%, சொத்துடமையில் 24% இப்போது 7.9%, பட்டதாரிகள் 34% இப்போது 0.9%, வங்கிகள் 3, இப்போது 0, அரசாங்க ஊழியர்கள் 63% இப்போது 3.7%, நிலவுடமை 37% இப்போது 0.8%, தமிழ்ப்பள்ளிகள் 1028 இப்போது 523, அமைச்சர்கள் 16 பேரில் 2 இப்போது 33 இல் ஒன்று…” (தமிழ் நேசன் 30.7.11)
இது மிகச் சுருக்கமான புள்ளிவிபரம். இந்தியர்களின் அவல வாழ்க்கை குறித்த முழு புள்ளிவிபரத்தையும் கண்டால், மான உணர்வுள்ள, உரிமை உணர்வுள்ள எந்த ஓர் இந்தியனும், எந்த ஒரு மனிதப் பிறவியும் வீறுகொண்டு எழாமல் இருக்க முடியாது, மஇகாவினரைத் தவிர.
இந்நாட்டு இந்தியர்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி எந்த அளவிற்கு பாழடைந்துள்ளது என்பது மஇகா தலைமைத்துவத்திற்குத் தெரியாத ஒன்றல்ல. அதற்கு யார் காரணம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இருந்தும் மந்திரி பதவிக்காகவும் சில்லறை பதவிகளுக்காகவும் இந்தியர்களின் உரிமைகளை அம்னோவிடம் அடகு வைத்துவிட்டு ஆண்டுதோறும் கோரிக்கை நாடகம் நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் மஇகா தயாரித்த ஓர் இரகசிய ஆவணம் அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் வலுவற்றிக்கும் இந்தியர்கள் வறுமைப்பிடியில் சிக்கிக் கொண்டு மலேசியாவின் “கடைநிலை” (underclass) மக்களாகப் போகிறார்கள் என்பது கிட்டத்தட்ட நிச்சயமானது என்று கூறுகிறது.
“Presently, Indians have neither the political nor the economic leverage to break out of their vicious circle of poverty, and they also lack the necessary human resources, which in turn feed each other. They also have no financial, commercial or industrialised structure, besides lacking the necessary managerial and entrepreneurial skills. Further, their ownership of the share capital of limited companies has not shown much improvement over the last two decades. In fact, if their problems are not arrested and reversed in a timely and proper manner, then, in all likelihood, it is almost certain that Malaysian Indians will emerge as an underclass in Malaysia.
“The share of Malaysian Indians in the corporate sector has been relatively stagnant over the last 25 years, especially since the NEP was introduced in Malaysia.”
மஇகாவின் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள தைப்போல் இந்தியர்கள் “அண்டர்கிளாஸ்” ஆகிவிட்டனர்.
டிசம்பர் 23, 2010இல், தலைவராகப் பதவி ஏற்ற 17 நாள்களுக்குப் பிறகு ஜி.பழனிவேல் இந்தியர்கள் ஓரங்கப்பட்டவர்கள். அதில் சந்தேகமே இல்லை என்று பகிரங்கமாக கூறினார். இந்தியர்களை ஓரங்கட்டியது யார்? தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களா? தமிழ்ப்பள்ளி மாணவர்களா? இந்திய கூலிகளா? பத்துமலைக்கு காவடி எடுக்கும் இந்துக்களா? பால்குடம் ஏந்தும் இந்து பெண்களா? தோட்டங்களில் இன்னும் குனிந்து நிற்கும் இந்திய தொழிலாளர்களா?
இந்நாட்டை 1957 ஆம் ஆண்டிலிருந்து அம்னோ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மலேசிய அரசாங்கம்தான் காரணம். இந்தியர்களின் வறுமைக்கு, அவர்களின் அண்டர்கிளாஸ் தகுதிக்கு அம்னோதான் காரணம். அம்னோவுக்கு துணைபோன மஇகாதான் காரணம்.
இந்தியர்கள் இன்றுவரையில் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு, ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு, காரணமான அம்னோவுக்கு இந்தியர்கள் வாக்களிக்க வேண்டும் என்று தமது படம் பொரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பையில் அரிசியைக் கொடுத்து வாக்கு வேட்டையாடுகிறார் மஇகா தலைவர் ஜி.பழனிவேல். 21 ஆம் நூற்றாண்டில் அரிசி, மேகீ மீ, துட்டு கொடுத்து இந்தியர்களின் வாக்குகளுக்கு விலை பேசுகிறார் மஇகா தலைவர். அதுவும் இந்தியர்களை ஓரங்கட்டிய அம்னோவை தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற வேட்கையில்.
எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் கிட்டத்தட்ட 70 நாடாளுமன்ற தொகுதிகளில் பாரிசானின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். தங்களைத் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட, அண்டர்கிளாஸ் மக்களாக வைத்திருக்கப்போகும் பாரிசானுக்கு இந்தியர்கள் வாக்களிக்கலாமா என்று அவர்கள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.
சிவன் அளித்த புள்ளிவிபரங்கள், பிரம்மா அளித்த அரிசி பொட்டலங்கள் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பால் சென்று, இந்தியர்கள் ஏன் அண்டர்கிளாஸ் ஆக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அதற்குப் பொறுப்பானவர்கள் அம்னோக்காரர்களா என்பதையும் அதற்கு மஇகாவினர் துணை போனார்களா என்பதையும் கற்றறிந்த ஒவ்வொரு இந்தியரும், ஒவ்வொரு இந்திய இளைஞரும், இந்திய ஆண்களும் பெண்களும், கண்டறிந்து கொள்ள வேண்டும்.
அப்போதுதான் இந்திய வாக்காளர்கள் யாருக்கு எமனாக வேண்டும் ? என்ற வினாவுக்கு விடை கிடைக்கும்.