[கா. ஆறுமுகம், வழக்கறிஞர்]
ஒரு நீண்ட துப்பாக்கியால் ஒருவனை குறி வைத்து சுடுவது போன்ற படத்துடன் “அத்துமீறி செல்பவர் தண்டிக்கப்படுவர்” என்ற அறிவிப்பு சிகப்பு நிற இரும்பு குழாய் சாலை தடுப்பு, காவலாளியையும் இவற்றையும் தாண்டினால்தான் இந்தியர்களை சந்திக்க முடியும்.
இந்தியர்கள் தோட்டங்களில் அவ்வளவு பாதுகாப்பாக வாழ்ந்தனர்! இதே போன்ற சூழல் கொண்ட மற்ற இடங்கள் காவல் வளாகம், இராணுவத்தளம், பணக்காரர்கள் வாழும் சொகுசு பகுதிகள். இந்தியர்களுக்கு ஏன் இந்த பாதுகாப்பு வளையம்.
சோமாலிய கடல் கொள்ளையர் கப்பலை பிணையாக பிடிப்பதுபோல் இவர்களை பிடிக்க யார் வருவர்? அல்லது இவர்களிடம் கொள்ளையிட உளியையும், செம்பனை பழம் வெட்டும் குழாய் கத்தியும் தவிர பாதுகாக்கப்பட வேண்டிய ஆயுதங்களும் யாவை?
இந்நிலையை உள்வாங்கும்போது, கூண்டில் அடைக்கப்பட்ட குருவியும், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட பிராணியும், பண்ணையில் வளரும் கோழிகளும் ஆடுகளும் மாடுகளும் மனக்கண் முன் தோன்றுவதில் வியப்பு ஒன்றுமில்லை. இவை இந்நிலையில் பாதுகாப்பாகவும் உயிர் வாழவுமே வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
ஆனால், இவர்கள் மனிதர்கள், நாட்டின் குடிமக்கள். அரசமைப்பில் இவர்கள் பிரஜைகள், நாடு இவர்களுக்கும் சொந்தமானது. மாற்றமில்லையா?
1996ஆம் ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி மாரானை நோக்கி 200 கிலோமீட்டர் நடந்தனர். மூன்று நாள்கள் நீடித்த இந்த நடை பயணம் முன் வைத்த கோரிக்கை, “தோட்ட மக்களும், நாட்டு மக்களே!” என்பதாகும். மிகவும் அடிப்படைத் தேவையான உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை அற்ற வக்கற்ற நிலையில் கடனில் வாழாத உழைப்பாளி கிடையாது என்ற நிலை உருவாக்கப்பட்டிருந்தது.
தோட்டங்கள் மேம்பாடு அடைந்தபோது? அந்நிலைக்கு உகந்த வர்ணனை, ‘சப்பி எடுக்கப்பட்ட சாத்துக்கொடிகளாக’ என்பதாகும்.
நவம்பர் 25, 2008-ல் நடந்த இண்ட்ரா•ப் பேரணி, இந்நிலையை தேசிய விவகாரமாக முன்னிலைப்படுத்தியது. நாட்டின் முக்கியமான அனைத்து நாளேடுகளும், (உத்துசான் மலேசியா, தி ஸ்ரேட் டைம்ஸ், தி ஸ்டார் உட்பட) ஒலி – ஒளி அலைவரிசைகளும் அந்தப் பேரணிக்கான ஆய்வில், ‘இந்தியர்கள் தேசிய நீரோட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளனர்’ என்றே கருத்துரைத்தனர்.
பள்ளத்தை நிரப்ப மண் வேண்டும் என்றால், யாருடையதை எடுப்பது? செல்வம் கொழிக்கும் நாட்டில் மண் இல்லையா? என்பதற்கு அரசியல் தீர்வாக ஆட்சியில் உள்ளவர்கள் விடைகாண மறுக்கிறார்கள். உண்மையான விடுதலையும் தீர்வும், பயமுறுத்தலுக்கும் பரிதாபத்திற்கும் இடையில் சிக்கித்தவிக்கிறது.
‘அடைக்கப்பட்ட’ சமூகம்தானே என்று உணவளித்து, உடை கொடுத்து, பையில் பணமும் வைத்து வாக்களிக்க மீண்டும் அழைத்து வருகிறார்கள்.
என்ன செய்யலாம் என்ற எண்ணம் ஒரு மாற்று சிந்தனையாகவே எழ வேண்டும். எழும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே தென்படுகிறது.