சீனா அனைத்துலக விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் எதிர்க்க முனைகிறது: நியூஸிலந்துப் பிரதமர்

சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்குக் குறித்து நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நேட்டோ கூட்டணியின் உச்சநிலைச் சந்திப்பில் குறிப்பிட்டுச் சீனாவைப் பற்றி அவர் பேசினார்.

பசிபிக் வட்டாரத்தில் அதிகரிக்கும் பதற்றத்தையும் அங்குள்ள நிலைத்தன்மைக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளையும் அவர் சுட்டினார்.

அனைத்துலக விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்குமுறை மீது அதிகரிக்கும் நெருக்குதல் பற்றியும் திருவாட்டி ஆர்டன் அக்கறை தெரிவித்தார்.

அண்மைக் காலத்தில் சீனா இன்னும் உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அனைத்துலக விதிமுறைகளையும் கோட்பாடுகளையும் எதிர்க்க முனைவதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசதந்திர ஈடுபாட்டுக்கு, விதிமுறைகள் அடிப்படையிலான ஒழுங்குமுறையை உறுதியுடன் செயல்படுத்தும்படி திருவாட்டி ஆர்டன் கேட்டுக்கொண்டார்.

மனித உரிமை மீறல்களை எப்போதும் எதிர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ராணுவ பலத்தை அதிகரிக்காமல் உறவுகளையும் பொருளியல் கட்டமைப்பையும் மேம்படுத்துவதன் வழி, இந்தோ-பசிபிக் வட்டார மீள்திறனை வலுப்படுத்த வேண்டும் என்று திருவாட்டி ஆர்டன் சொன்னார்.

நியூஸிலந்து நேட்டோ கூட்டணியின் உறுப்பினராக இல்லை.

இருப்பினும் அந்தக் கூட்டணியின் பங்காளி நாடாக அது விளங்குகிறது.

இவ்வாண்டில் முதன்முறையாக நேட்டோ உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள நியூஸிலந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நியூஸிலந்தின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகச் சீனா இருப்பதால், அதன் விவகாரங்களைக் கவனத்துடன் வெல்லிங்டன் கையாள்கிறது.

 

 

 

Seithimediacorp