கடினமான நேரத்தில் இந்தோனேசியாவின் ஆதரவுக்கு நன்றி: உக்ரேனிய அதிபர்

இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ (Joko Widodo), உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியைத் (Volodymyr Zelenskyy) தலைநகர் கீவில் சந்தித்துள்ளார்.

இந்தக் கடினமான நேரத்தில் இந்தோனேசியாவிடமிருந்து ஆதரவு பெற்றிருப்பது குறித்துத் திரு. ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்தார்.

போரால் அவதியுறும் உக்ரேனுக்குச் சென்றுள்ள முதல் ஆசியத் தலைவர் திரு. விடோடோ.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க உதவுவதற்காக அவர் தனது துணைவியாருடன் அங்கு சென்றிருக்கிறார்.

உலக அளவில் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடி பற்றியும் திரு. விடோடோ கலந்துபேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்னர், அவர் இர்பின் (Irpin) நகரில் உள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடத்தைப் பார்வையிடச் சென்றார்.

அந்தக் கட்டடம், ரஷ்யாவால் தாக்கப்பட்டு முற்றிலும் சேதமடைந்திருந்தது.

இர்பின் நகரில் சுமார் 70 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதமடைந்திருப்பதாக, அந்நகர மேயர் தெரிவித்தார்.

திரு. விடோடோ, உக்ரேன் தலைநகர் கீவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கும் சென்று, மருத்துவப் பொருள்களை நன்கொடையாக வழங்கினார்.

 

 

Seithimediacorp