வங்காளதேசம் – கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு

வங்காளதேசத்தில் கடந்த காலங்களில் இல்லாத அளவு பேய் மழை கொட்டியது. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டது.

வங்காளதேசத்தில் கடந்த மே மாதம் முதல் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தன. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ள பாதிப்பை அந்நாடு எதிர்கொண்டுள்ளது. ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

வீடுகளை இழந்த மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். மழை, வெள்ளத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன போக்குவரத்து முடங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த மே மாதம் 17-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையில் மழை தொடர்பான சேதங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.

மழை வெள்ளத்தில் சிக்கி 75 பேரும், மின்னல் தாக்கி 15 பேரும், 2 பே பாம்பு கடித்தும், மேலும் 10 பேர் மற்ற காரணங்களுக்காக உயிரிழந்துள்ளனர். கனமழையால் சுமார் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Malaimalar