பிரான்சில் இன்று புதிய அமைச்சரவை மாற்றம்

பிரான்ஸ் அமைச்சரவையில் இன்று மாற்றம் இடம்பெற்றுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சில அமைச்சர்கள் தோல்வியடைந்ததை அடுத்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் இந்த அமைச்சரவை மறுசீரமைப்பை கண்டனம் செய்த அதிதீவிர வலதுசாரி தலைவர் மறீன் லு பென் அண்மையில் நடந்த பொதுத்தேர்தலில் வெளிப்பட்ட மக்கள் தீர்ப்பை மீண்டும் அரச தலைவர் புறக்கணித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய மாநாடு, ஜி7 மாநாடு மற்றும் நேட்டோ உச்சிமாநாடு ஆகிய நிகழ்ச்சி நிரல்களில் மூழ்கியிருந்த இமானுவேல் மக்ரன் இன்று மீண்டும் உள்நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கு திரும்பியிருந்தார்.

அந்த வகையில் இன்று பகல் அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் இடம்பெற்ற பின்னர், இன்று மாலை அமைச்சரவை கூட்டப்பட்டிருந்தது.

புதிய அமைச்சரவையுடன் மக்ரன் பேச்சு

நாளை மறுதினம் புதன் கிழமை பிரதமர் எலிசபெத் போர்ன், நாடாளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையிடலை செய்தபின்னர், நம்பிக்கை வாக்கெடுப்பை கோரலாம் என்ற ஊகங்கள் உள்ள நிலையில் புதிய அமைச்சரவையுடன் மக்ரன் பேசியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்த அரசதலைவர் மக்ரன் நாடாளுமன்றத்தில் தனக்கு இருந்த அறுதிப் பெரும்பான்மையை இழந்ததுடன் அந்த தேர்தலில் சில அமைச்சர்கள் தோல்வியடைந்திருந்தனர்.

இதனையடுத்து அடுத்து பிரெஞ்சு அரசியல் பாரம்பரியத்தின்படி, தோல்வியடைந்தவர்கள் பதவி விலகிய நிலையில் அந்த இடங்களுக்கு இன்று புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய புதிய அமைச்சரவையில் பிரதமர் எலிசபெத் போர்ன் உட்பட 21 பெண்களும், அதேபோல 21 ஆண் அமைச்சர்களும் நியமிக்கபட்டு சமத்துவம் பேணப்பட்டுள்ளதாக எலிசே மாளிகை அறிவித்துள்ளது.

அதிதீவிர வலதுசாரி தலைவர் கண்டனம்

ஆயினும் இன்று இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பை கண்டனம் செய்த அதிதீவிர வலதுசாரி தலைவர் மறீன் லுபென் அண்மையில் நடந்த தேர்தலில் வெளிப்பட்ட மக்கள் தீர்ப்பையும், பிரெஞ்சு மக்களின் மாறுபட்ட கொள்கைக்கான விருப்பத்தையும் மீண்டும் மக்ரன் புறக்கணித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்

 

 

 

IBC Tamil