மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா – சிக்கலில் போரிஸ் ஜான்சன் அரசு

இங்கிலாந்தின் முக்கிய 4 மந்திரிகள் கடந்த 24 மணி நேரத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பழமைவாத கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் துணை கொறடாவாக எம்.பி. கிறிஸ் பின்ஷர் செயல்பட்டு வந்தார்.

கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக கிறிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை கொறடா பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தொடர்ந்து பழமைவாத கட்சி எம்.பி. பதவியில் இருந்து கிறிஸ் இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் கிறிஸ் மீது பிரதமர் போரிஸ் ஜான்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, இங்கிலாந்து நிதி மந்திரி ரிஷி சுனக், சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்நிலையில், அரசு மீதான நம்பிக்கையை இழந்ததால் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான மந்திரி வில் குயின்ஸ் மற்றும் சட்டத்துறை மந்திரியான லாரா டிராட் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பு, ஒரே நாளில் இங்கிலாந்தின் 4 முக்கிய மந்திரிகள் அடுத்தடுத்து ராஜினாமா என தொடர் பிரச்சினைகளால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

Malaimalar