உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது – ஈரான் அரசு அதிரடி

ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்ப்பதற்கான முயற்சியை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை, கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் அமைப்பதை தடுக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்தது.

இது ஈரான் அணு ஆயுதத்தை தயாரிப்பதை தடுக்க வகை செய்கிறது. இதற்காக ஈரான் மீது மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து, அடுத்து அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப் விலகினார்.

தற்போது அதிபர் ஜோ பைடன் மீண்டும் ஈரானை அணுசக்தி ஒப்பந்தத்தில் சேர்க்க முயற்சித்து வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்துவந்தது. இதற்கிடையே ஈரான் தனது அணுசக்தி தளங்களில் சர்வதேச ஆய்வாளர்களின் கண்காணிப்பு கேமராக்களை மூடிவிட்டது.

தற்போது ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தோஹா பேச்சுவார்த்தை முடிவின்றி முடிந்ததற்காக ஈரானும், அமெரிக்காவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டின. அணு உலைகளில் அணு ஆயுதம் தயாரிக்க ஈரான் முயற்சித்து வருவதாகவும், இதற்கான சோதனைகளை ஈரான் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்ததாகவும், உளவு வேலையில் ஈடுபட்டதாகவும் டெஹ்ரானில் செயல்பட்டு வரும் இங்கிலாந்து தூதரகத்தின் மூத்த அதிகாரி மற்றும் சில வெளிநாட்டினரை ஈரான் புரட்சிப் படையினர் கைது செய்தது உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

Malaimalar