அரசமைப்புச் சட்டத்தின் ஐந்தாம் பிரிவு ஒரு நபரின் உரிமைகளைப் பற்றி விளக்குகிறது. குறிப்பாக, 5(1) ஆம் பிரிவு ஒரு நபரின் உயிரையோ, தனிப்பட்ட உரிமையையோ சட்டத்திற்கிணங்கதான் இழக்கச் செய்ய முடியும். இந்தப் பிரிவுக்கு ஆதரவாகப் பக்கப் பலமாக இயங்குவதுதான் அரசமைப்புச் சட்டத்தால் அமைக்கப்பெற்ற நீதிமன்றங்கள்.
நாட்டில் சட்ட ஒழங்கை பாதுகாக்கும் பொறுப்பு காவல் துறைக்கு உண்டு. காவல் துறை அரசமைப்புச் சட்டத்தைத் தற்காக்கும் பொறுப்பைக் கொண்டிருக்கிறது. எனவே, 5(1) ஆம் பிரிவுக்கு காவல்துறை மதிப்பளித்துச் செயல்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பைப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும்.
சுருக்கமாகச் சொன்னால் ஒரு நபரின் உயிரைப் பறிக்க வேண்டுமாயின் அந்த நபர் மரணத் தண்டனையை அனுபவிக்கும் குற்றத்தைச் செய்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, அந்த நபர் முறையாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு மரணத் தண்டனையைப் பெறுவதற்கான சான்றுகளை நிரூபிக்க வேண்டும். அதிலும் நியாயமான ஐயத்துக்கு அப்பால் நிரூபிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றம் மரணத் தண்டனை தீர்ப்பு வழங்கினாலும், மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு. சட்டம் அதற்கு வகைச் செய்கிறது. மரணத் தண்டனை குற்றம் என்றால் அவ்வாறு குற்றம் சாட்டப்பட்டவர் வழக்குரைஞரை நியமிக்க முடியவில்லையெனின் நீதிமன்றமே ஒருவரைப் பிரதிநிதிக்க ஏற்பாடு செய்யலாம். அந்த வழக்குரைஞரின் ஊதியத்தை அரசு ஏற்றுக்கொள்கிறது.
இந்தக் காலகட்டத்தில் மரணத் தண்டனையைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருவதைக் கவனித்திருப்பீர்கள். சமீபத்தில் மரணத் தண்டனையை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்தை அரசு இயற்றியுள்ளது. இந்த நிறுத்தி வைப்பானது மரணத் தண்டனையை முழுமையாக ரத்து செய்யவில்லை. மாறாக, அந்தத் தண்டனையை வழங்கும் விருப்புரிமையை நீதிமன்றத்திடம் ஒப்படைத்துவிட்டது. இந்த மரணத் தண்டனையை நிறுத்தி வைக்கும் சட்டமானது மரணத் தண்டனையை முழுமையாக அகற்றிவிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அதே சமயத்தில் கொடுமையான, கொடூரமான குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு மரணத் தண்டனை விதிக்கும் விருப்புரிமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உயிருக்கு உயிர் என்ற பழையக் கோட்பாட்டிற்கு முழுக்குப்போடும் நடவடிக்கை எனலாம்.
நடப்பில் இருக்கும் சட்டத்தைக் கவனித்தில் கொண்டு பார்க்கும்போது, நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்தாலும், உச்ச நீதிமன்றங்கள் அதை உறுதிப்படுத்தினாலும் இறுதியில் எந்த மாநிலத்தில் மரணத் தண்டனை விதிக்கப்பட்டதோ அந்த மாநில ஆட்சியாளரிடம் கருணை மனு சமர்ப்பிக்கலாம். இறுதி முடிவு அந்த மாநில ஆட்சியாளரிடம் தான் இருக்கிறது.
பொதுவாகவே, எந்த ஒரு குற்றத்தையும் – நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட குற்றத்தை மன்னிக்கும் அதிகாரம் மாநில ஆட்சியாளருக்கு உண்டு. அதுபோலவே மலாக்கா, பினாங்கு, சபா, சரவாக் மாநில ஆளுநர்களுக்கு அந்த மன்னிக்கும் அதிகாரம் உண்டு. (காண்க: அரசமைப்புச் சட்டம், 42ஆம் பிரிவு)
ஆகமொத்தத்தில், அரசமைப்புச் சட்டம் தரும் உயிர் பாதுகாப்பு, அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் இவையாவும் பாதுகாப்பு வழங்குவதில் ஒரு சிறு பிசகு காணப்பட்டாலும் அதை நிவர்த்திச் செய்யும் பொருட்டு மாமன்னர், ஆட்சியாளர்களின் மன்னிப்பு போன்றவை உதவுகிறது எனலாம்.
சட்டத்திற்கிணங்கதான் ஓர் உயிரை இழக்கச் செய்ய முடியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு குற்றம் செய்தார் என்ற சந்தேகத்தில் காவலுக்கு உட்படுத்தப்பட்டவர்களுக்குப் போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுமே!
ஆமாம். தடுப்புக்காவலில் இருப்போர் எந்த ஒரு நீதிமன்ற தீர்ப்புக்கும் உட்படாதவர்கள். மரணத் தண்டனைக்கு ஆளாகாதவர்கள்.
ஆனால் சில தவறான நடவடிக்கைகளால், அதாவது காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் கைதியின் பாதுகாப்பில் கவனக்குறைவு அல்லது தடயங்கள் பெறும் பொருட்டு பயன்படுத்தப்படும் வன்முறை யாவும் சட்டத்துக்குப் புறம்பானவையாகும்.
ஏனவே, காவல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் கைதிக்கு மரணம் நேர்ந்தால், அதிலும் சந்தேகத்திற்குரிய சூழ்நிலையில் மரணம் நேர்ந்தால் அது இயற்கையாக ஏற்பட்ட மரணமா அல்லது சில தகாத நடவடிக்கைகளால் மரணம் நேர்ந்ததா என்ற கேள்வி எழலாம் அல்லவா?
ஒரு தடுப்புக்காவல் கைதி நோயாளியாக இருக்கலாம். மருத்துவம் தேவைப்படும். அந்த மருத்துவச் சிகிச்சை வேண்டுமென்றே மறுக்கப்பட்டால் தவறல்லவா? அவ்வாறு சிகிச்சை மறுக்கப்பட்டு கைதி மரணம் அடைந்தால், கவனக்குறைவால் மரணம் விளைவித்த குற்றத்திற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது.
சமீப காலமாக, காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தவர்களின் மரணங்கள் கூடுவதைக் கவனிக்காமல் இருக்க முடியாது. அரசமைப்புச் சட்டம் போதுமான உயிர்பறிப்புக்கு எதிரான பாதுகாப்பை நல்கினாலும் பொது வாழ்வில் அந்தப் பாதுகாப்பு வலுவற்றுக் காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டும், ஏக்கப் பரிந்துரையும் அரசு கவனிக்க வேண்டும்.
அரசமைப்புச் சட்டம் மனித உயிருக்கு மதிப்பளிக்கிறது. பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாதவர்களின் கையில், தடுப்பு காவல் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுகிறது என்றால் அரசின் கவனம் இதில் தீவிரமாக வேண்டும். கைதிகளின் பாதுகாப்பில் மிகுந்த கவனம் தேவை. குற்றவாளிகளும் சரி, குற்றம் சுமத்தப்பட்டுக் காவல்துறையின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 5(1) ஆம் பிரிவு பாதுகாப்பு உண்டு என்பதை மறக்கக்கூடாது.