மூளை செயலிழந்த இருவருக்கு வெற்றிகரமான பன்றி இதய மாற்று அறுவைச் சிகிச்சை

அமெரிக்காவின் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவர்கள் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்ட இரு பன்றி இதயங்களை மூளை செயலிழந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.

அந்த இதயங்கள் முறையாகச் செயல்பட்டதாகவும் 3 நாள் ஆய்வின்போது உடல் அவற்றை நிராகரிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். Revivicor என்ற நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அந்த இதயங்களில் கிருமிகள் ஏதும் இல்லாதது உறுதி செய்யப்பட்டது.

அவற்றில் மொத்தம் 10 மரபணு மாற்றங்கள் செய்யப்பட்டன. பன்றிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள பொருத்தமின்மையைத் தவிர்க்கவும் மனித உடல் இதயத்தை நிராகரிக்காமல் இருக்கவும் அந்த மாற்றங்கள் உதவும்.

பன்றி உறுப்புகளை உயிருடன் இருக்கும் நோயாளிகளைக் காட்டிலும் மூளை செயலிழந்த நோயாளிகளுக்குப் பொருத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மாற்று அறுவைச் சிகிச்சைகளுக்குப் போதுமான மனித உறுப்புகள் கிடைப்பதில்லை. அதற்குப் பதில் பன்றி உறுப்புகளைப் பயன்படுத்துவதே நீண்டகாலக் குறிக்கோள்.

 

-smc