புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது, “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.

ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன என்று கூறி இருந்தார். இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறியதாவது:- கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் மிகவும் பரவக்கூடியதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும்.

அதிக எண்ணிக்கையில் பாதிப்பு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் இருக்கலாம். தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் தரவு சார்ந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றார். சமீப காலமாக உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

-mm