உலக வங்கியிடமிருந்து 60 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை பெறுவதற்கான விண்னப்பத்தை அப்போதைய பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டின் கீழ் இயங்கிய பிரதமர் அலுவலகத்தில் உள்ள ஒரு பிரிவு தயாரித்ததற்கான ஆவணங்களை பிகேஆர் இன்று காட்டியுள்ளது.
பகிரங்கமாகக் கிடைக்கும் 1999ம் ஆண்டு மார்ச் 3ம் தேதியிடப்பட்ட உலக வங்கி ஆவணம் ஒன்றில் பொருளாதாரத் திட்டப் பிரிவு, 1998ம் ஆண்டு ஜுலை மாதம் 26ம் தேதி வாக்கில் சமூகத் துறைக்கான கடனுக்கு விண்ணப்பத்தை தயாரித்தது.
அந்த விவரங்களை இன்று பிகேஆர் தலைமையகத்தில் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி நிருபர்களிடம் வெளியிட்டார்.
அந்த உலக வங்கியிடமிருந்து எத்தகைய நிதி உதவியையும் தாம் நிராகரித்ததாக மகாதீர் சொல்லிக் கொள்வது பொய் என்பதற்கு இது தக்க சான்று என அவர் சொன்னார்.
“அந்த ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. அந்த அரசாங்கத்தில் மகாதீர் பிரதமராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தார். முன்னாள் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அந்த நேரத்தில் முதுகு வலியுடனும் கறுத்துப் போன கண்களுடனும் சிறையில் இருந்தார். ஆகவே அதில் அவருடைய ஈடுபாடு நிச்சயமாக இல்லை,” என்றார் ராபிஸி.
“மகாதீருடைய உத்தரவு இல்லாமல் இபியூ விண்ணப்பம் செய்திருக்க முடியாது. மகாதீர் அன்வாரை தாக்கிப் பேசிக் கொண்டும் அந்நிய ஏஜண்ட் என்றும் கூறிக் கொண்டிருந்த வேளையில் அமைதியாக உலக வங்கியிடமிருந்து பணம் கோரியிருக்கிறார்.”
1998ம் ஆண்டு நிதி நெருக்கடியின் போது உலக வங்கியிடம் தாம் பணம் கேட்டதை நிரூபிக்க திருக்குர் ஆன் மீது சத்தியம் செய்யுமாறு மகாதீர் அன்வாருக்குச் சவால் விடுத்திருந்தார்.
பிகேஆர் காட்டிய ஆவணத்தின் படி, ஆறு மாதங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்த பின்னர் மதிப்பீட்டுக் குழு 1998ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி புறப்பட்டது. 1999ம் ஆண்டு ஜனவரி மாதம் பேச்சுக்கள் தொடங்கின. 1999ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி அந்தக் கடன் நடப்புக்கு வந்தது.
புதல்வரை மீட்பதற்கா?
மொத்தம் 700 மில்லியன் ரிங்கிட் பெறும் பல கடன்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் 1998ம் ஆண்டு அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டதை பிகேஆர் வழங்கிய மற்ற ஆவணங்கள் காட்டின.
மகாதீர், “தமது புதல்வருடைய நிறுவனத்தை மீட்பதற்கு” மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ராபிஸி கேட்டுக் கொண்டார்.
“அவர் இந்த வயதில் 1998ம் ஆண்டு தமது புதல்வரான மிர்ஸானுடைய நிறுவனத்தை காப்பாற்றியதில் தமது பங்கை விளக்குவதின் மூலம் தமது தோற்றத்தை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்,” என ராபிஸி கூறினார்.
“கிட்டத்தட்ட நொடித்துப் போகும் நிலைக்கு வந்து விட்ட மிர்ஸானுக்குத் தாம் சம்பந்தப்பட்டுள்ள ஒரு நிறுவனம், பிலிப்பீன்ஸில் இயங்கும் மதுபான தயாரிப்பு நிறுவனமான சான் மிக்குவலை வாங்கும் அளவுக்கு அவ்வளவு பணம் எப்படி வந்தது?”
இப்போது அந்த நிறுவனம், மலேசியாவில் எண்ணெய் எரிவாயு கீழ் நிலை வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது.