ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க வேண்டுமானால் புதிய தலைவரை தேர்ந்தெடுங்கள் – அன்வார் முழக்கம்

மக்கள் நீதி கட்சியின்  தலைவர் அன்வார் இப்ராகிம் தான் பிரதமராக முடியாமல் போனதிற்காக, தனது இயலாமைதான் காரணம் என்று கருதுபவர்கள் ஒரு புதிய தலவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று சாடினார்.

இன்று, பிகேஆர் தேசிய காங்கிஸ் கொள்கை உரையில், குற்றவியல் விசாரணைகளை எதிர்கொள்பவர்கள் உட்பட அம்னோ எம்.பி.க்களின் ஆதரவுடன் கடந்த ஆண்டு தான் பிரதமராக இருந்திருக்கலாம் என்றும், ஆனால் தனது கொள்கைகளில் சமரசம் செய்ய விரும்பாததால் பின்வாங்கியதாகவும் அன்வார் கூறினார்.

“தலைவராக நான் தோல்வியடைந்துவிட்டேன் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள்.”

“(இவர்களிடம்), நீங்கள் இங்கே கேளுங்கள். ஊழல்வாதிகளுக்கு அடிபணிந்து நான் வெற்றி பெறுவதை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் உங்கள் கட்சித் தலைவராக வேறு ஒருவரைத் தேடிக் கொள்ளுங்கள்” என்று அவர் பிரதிநிதிகளின் உரத்த ஆரவாரத்திற்கிடையே முழங்கினார்.

105 எதிர்க்கட்சி எம்.பி.க்களும் 15 அம்னோ எம்.பி.க்களும் அவருக்கு ஆதரவளிக்க ஒப்புக் கொண்டதால், கடந்த ஆண்டு தான் பிரதமராக பதவியேற்கப் போவதாக அன்வார் கூறியிருந்தார்.

இருப்பினும், கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள பல அம்னோ தலைவர்கள் தங்கள் வழக்குகளை முடிக்க சம்மதிக்குமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறப்படும் கடைசி நிமிடத்தில் தான் ஹேண்ட்பிரேக்கை இழுக்க நேரிட்டதாக இந்த எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

“அம்னோ மற்றும் பிஎன் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை முடித்து வைப்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது என்று அவர்களிடம் கூறினேன்.”

“நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ‘நன்றி ‘ என்று சொன்னேன், பொதுத் தேர்தலில் நாம் மீண்டும் ஒருவரையொருவர் எதிர்கொள்வதை நான் விரும்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

அயோக்கியனுக்கான கடைசி புகலிடம்

அன்வார் தனது உரையில், இஸ்லாம் மற்றும் மலாய் இனத்தை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் நாட்டிலிருந்து பில்லியன் கணக்கான ரிங்கிட்களைத் திருடும் அரசியல்வாதிகளின் போக்கை வன்மையாக சாடினார்.

இந்த போர்ட் டிக்சன் எம்பி குறிப்பாக யாரையும் குறிப்பிடவில்லை என்றாலும், மலேசிய அரசியல்வாதிகளை இலங்கையின் முன்னாள் தலைவர்  கோட்டாபய ராஜபக்சவுடன் ஒப்பிட்டார், அவர் சமீபத்தில் தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

“இந்த

ராஜபக்சே போன்றவர்கள் தனது மக்களை ஒடுக்கி, முஸ்லிம்கள், பௌத்தர்கள் மற்றும் இந்துக்களுக்கு இடையே (இலங்கையில்) விரோதத்தை உருவாக்கினார். நாட்டின் கஜானாவை காலியாக்கினார்,” என்றார்.

ராஜபக்சே போன்ற சுயநலவாதிகள் அரசியலில் இருப்பதாக அன்வார் கூறினார்.

“அவர்கள் தங்களை தற்காக்க மதம் மற்றும் இனத்தைப் பயன்படுத்துவார்கள். அவர்கள் நாட்டிற்காக, இஸ்லாத்திற்காக, மலாய் இனத்திற்காகதான் செய்கிறோம் என்று சொல்வார்கள்.

“அவர்கள் செய்வது உண்மையில் இஸ்லாம் போதனைக்கு எதிராக இருக்கும்.”.

“அதனால்தான் தேசபக்தி என்பது அயோக்கியனுக்கான கடைசி புகலிடம் என்று ஒரு பழமொழி இருக்கிறது,” என்று அவர் கூறினார்.