போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏராளமானோர் உயிருக்குப் பயந்து காவல்நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர்.
சூடானின் புளூ நைல் மாநிலம், அல் ரோசரீஸ் நகரில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலத்தகராறில் ஆரம்பித்த பிரச்சனை கடுமையான மோதலாக மாறி, ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதுடன், வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சற்று அமைதி திரும்பியது. எனினும், நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல்களில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 108 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மோதல் காரணமாக ஏராளமானோர் உயிருக்குப் பயந்து காவல்நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். அல்-ரோசரீஸ் நகரில் தொடர்ந்து மோதல் நீடிப்பதால் கூடுதல் படைகள் வரவழைக்கப்படுகின்றன. கிசான் பிராந்தியம் மற்றும் புளூ நைல் மாநிலத்தில் நீண்ட காலமாக பதற்றம் நிலவுகிறது.
2019ல் ராணுவத்தால் வெளியேற்றப்பட்ட முன்னாள் அதிபர் உமர் அல் பஷீருக்கு ஆதரவாக தெற்கு கொரில்லா போராளிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். ராணுவ தளபதி அப்தெல் ஃபத்தா அல்-புர்ஹான் தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையானது, பாதுகாப்பு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிலம், கால்நடைகள், தண்ணீர் மற்றும் மேய்ச்சல் தொடர்பான கொடூரமான மோதல்கள் வெடித்துள்ளதாகவும், பழங்குடியினரிடையே வன்முறை தீவிரமடைந்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
-mm