உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்- ஒப்பந்தத்தை மீறியதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

ஒடேசா துறைமுகம் மீதான ரஷிய தாக்குதலுக்கு அமெரிக்கா, ஐ.நா.சபை கண்டனம் ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் அமைதியாக செயல்பட துருக்கி அறிவுறுத்தல் உக்ரைன் ரஷியா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், தானியங்கள் ஏற்றுமதியை துறைமுகங்கள் வழியே மேற்கொள்வதை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

ஐ.நா.பொதுச்செயலாளர் முன்னிலையில் துருக்கி நாட்டில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில், தெற்கு உக்ரைன் துறைமுகமான ஒடேசா மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

ஒடேசா துறைமுக உள்கட்டமைப்பை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாகவும், மேலும் இரண்டு ஏவுகணைகள் உக்ரைன் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், உக்ரைன் ராணுவ செய்தித் தொடர்பாளர் சேர்கி ப்ராட்சுக் தெரிவித்துள்ளார்.

ரஷியா வழக்கம் போல் ஒப்பந்தங்களை மீறுவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்க்ஸி குற்றம் சாட்டி உள்ளார். ரஷியா என்ன சொன்னாலும், வாக்குறுதி அளித்தாலும், அதை செயல்படுத்தாமல் இருக்க வழிகளைக் கண்டுபிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஒடேசா துறைமுகம் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். துருக்கியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவது அவசியம் என்று ரஷியாவை ஐ.நா.சபை வலியுறுத்தி உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பும் ரஷியா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் அமைதியாகவும் பொறுமையாகவும் செயல்பட வேண்டும் என்று துருக்கி அறிவுறுத்தி உள்ளது.

 

-mm