பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக ஷபாஸ் ஷெரீப்பின் மகன் மீண்டும் தேர்வு

ஹம்சா ஷபாஸ் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு உடனடியாக பதவியேற்றார். இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷபாஸ் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில் கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்ததாக இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் இம்ரான்கானின் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 369 உறுப்பினர்களை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் பி.டி.ஐ. கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 178 ஆக உயர்ந்தது. அதன் கூட்டணி கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சிக்கு 10 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி அமைப்பதற்கு 185 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இம்ரான்கானின் கட்சி எளிதில் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுபடி நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு சட்டசபையில் நடந்தது. இதில் பி.டி.ஐ. கட்சியின் சார்பில் களம் இறங்கிய சவுத்ரி பர்வேஷ் இலாஹிக்கு 186 ஓட்டுகள் கிடைத்தன.

ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹம்சா ஷபாசுக்கு ஆதரவாக 179 பேர் ஓட்டுப்போட்டனர். எனினும் சவுத்ரிக்கு ஆதரவாக வாக்களித்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (க்யூ) கட்சி உறுப்பினர்களின் 10 ஓட்டுகள் செல்லாது என துணை சபாநாயகர் தோஸ்த் முகம்மது மசாரி அறிவித்தார். அதை தொடர்ந்து ஹம்சா முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக பதவியேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான்கானின் பி.டி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

-mm