பாலைவனத்தில் அதிநவீன நகரத்தைக் கட்ட எண்ணும் சவுதி அரேபியா

பாலைவனத்தில் அதிநவீன நகரத்தைக் கட்டும் திட்டம் குறித்து சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது  பின் சல்மான் (Mohammed bin Salman) தகவல் வெளியிட்டுள்ளார்.

NEOM என்று அழைக்கப்படும் நகரில் 170 கிலோமீட்டர் தூரம் வரை இருக்கக்கூடிய இரண்டு கண்ணாடிக் கட்டடங்களைக் கட்டவிருப்பதாக அவர் சொன்னார்.200 மீட்டர் அகலத்தில் இடம்பெறவிருக்கும் The Line கட்டடங்களில் குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள், பூங்காக்கள் ஆகியவை ஒன்றின் மீது ஒன்றாக அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டிலிருந்து 5 நிமிடங்கள் நடந்தாலே அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளமுடியும் என்று திட்டம் கூறுகிறது.NEOM நகரில் கார்களே இருக்கமாட்டா என்றும் அது உலகில் வாழ்வதற்குச் சிறந்த நகரமாக உருவெடுக்கும் என்றும் இளவரசர் முகமது உறுதி கூறியுள்ளார்.

நகரில் இயற்கை எரிசக்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது.உலகின் ஆகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையை அங்கு அமைக்கவும் திட்டம் இருக்கிறது.

இவை அனைத்தும் உண்மையில் சாத்தியமா?

2017-ஆம் ஆண்டில் நகரம் குறித்து அறிவிக்கப்பட்டதிலிருந்தே வல்லுநர்கள் பலர் ஐயத்துக்கு ஆளாகியுள்ளனர். 2045-ஆம் ஆண்டுக்குள் நகரில் 9 மில்லியன் பேர் வாழ்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக இளவரசர் முகமது கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவைப் பொருளியல் வல்லரசாக மாற்றுவதற்கு அதன் மக்கள்தொகையை அதிகரிப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார். திட்டத்தின் முதற்கட்டத்தைச் செயல்படுத்த 1.2 டிரில்லியன் சவுதி ரியால் (443 பில்லியன் வெள்ளி) செலவாகும் என்று கூறப்பட்டது.

 

 

-smc