தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராமசாமி உதவியாளரை நீக்கினார்

பினாங்கு இரண்டாவது துணை முதலமைச்சர் இன்னொரு நெருக்கடியில் சிக்கியுள்ளார். இந்த முறை அவரது ஊழியர்களில் ஒருவர் மாநில அரசாங்கத்தைச் சேர்ந்த சக ஊழியர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவமாகும்.

சதிஷ் முனியாண்டி இராமசாமியின் சிறப்பு உதவியாளர் என்ற பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சதிஷ் இளைஞர், ஆர்வமிக்கவர் என்பதால் அவர் நீக்கப்பட்டது குறித்து இராமசாமி “வருத்தம்” தெரிவித்துள்ளார்.

“அந்த விவகாரம் என் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இன்று புகார் கிடைத்ததும் நான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.  அதிகாரத்துவ பணிகளுக்காக அவர் கோலாலம்பூரில் இருக்கிறார்.

“வேலை நீக்கக் கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை இன்று என் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.”

அந்த விஷயம் குறித்து முதலமைச்சர் லிம் குவான் எங், இராமசாமியுடன் தொடர்பு கொண்டதாக தெரிய வருகிறது.

அந்த விவகாரத்தில் சதிஷ் தரப்பு “கருத்துக்களைப்” பெறுவதற்காக அவருடன் இராமசாமி பேசினார்.

அத்துடன் புகார் செய்தவரான முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியருடனும் பேசினார்.

அவர்கள் இருவரும் இன்று காலை மாநில அரசாங்க அலுவலகம் அமைந்துள்ள கொம்தாரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

புகார்தாரர் தாம் தாக்கப்பட்டதாக வடகிழக்கு போலீஸ் மாவட்ட தலைமையகத்தில் பிற்பகல் 2 மணிக்குப் புகார் செய்த பின்னர் பினாங்கு மருத்துவமனையில் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றார்.

அவர் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளவோ அந்தச் சம்பவம் குறித்து மேல் விவரங்களைத் தரவோ விரும்பவில்லை.

தாம் இராமசாமியுடன் பேசியதையும் தாம் இன்று பதவியை விட்டு விலகுவதையும் தொடர்பு கொள்ளப்பட்ட போது சதிஷ் உறுதிப்படுத்தினார்.

“அந்தச் சம்பவம் தனிப்பட்ட பிரச்னை என்றும் ஆனால் அது தாக்குதல் இல்லை” என்றும் அவர் சொன்னார்.

சதிஷ், பிராய் தொகுதிக்கான பிரச்சார அதிகாரியாகவும் துணை முதலமைச்சர் அலுவலகத்திலும் பணியாற்றி வந்தார்.

TAGS: