ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ விடுதியில் பயங்கர தீ விபத்து

இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள பல அடுக்குமாடி கட்டிடத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள முதல் மாடியில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வந்தது. ஏராளமான கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் விடுதியில் தங்கி வந்தனர். இந்நிலையில், இந்த விடுதியில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்தவர்கள் தப்பி வெளியேறினர். ஆனால் விடுதியில் இருந்தவர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். விடுதி ஜன்னல்களில் இரும்பு கம்பிகள் இருந்ததால், உள்ளே இருந்தவர்கள் வெளியில் தப்பி செல்ல முடியாமல் தீயில் சிக்கி திணறினர்.

தீ விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மத்திய ஆசியவைச் சேர்ந்தவர்கள் என்றும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாஸ்கோ நகர சபையின் பாதுகாப்புக் குழுவின் தலைவர் கிரில் ஷிடோவ், விடுதியில் பாதுகாப்பு மீறல்கள் குறித்த அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறினார்.

 

-mm