எஸ். பி. நாதன் நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தல் விரைவில் வர இருக்கின்றது. அதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில், மலேசியக் குடிமக்கள் என்றும் இல்லாத அளவிற்குச் சவால்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
குறிப்பாக, ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொள்கின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகள் அவர்களின் சுமைகளைத் தீர்க்கும் எனப் பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இவ்வேளையில், நம் சமூகச் சிக்கல்களை அறிந்த, நன்கு உணர்ந்த மக்கள் பிரதிநிதிகள் அல்லது நிகராளிகள் தேவை, மிக அவசியமாகி உள்ளது. வாக்காளர்களின் சிக்கல்களுக்கு ஏற்ற தீர்வுகளை முன்னெடுத்துச் செல்லும் வேட்கை மிகுந்த அரசியல்வாதிகள்தான் நமக்குத் தேவை.
சுயநலம் மிக்க, உதட்டளவில் மட்டும் சிக்கல்களைத் தீர்த்துவிடுவதாகச் சொல்பவர்கள் தேவையில்லை.
இன்றைய நிலையில், சிறுபான்மையினரின் தேவைகளின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மலாய்க்காரர்களின் நலன்களைக் காக்கப்படுவதை அரசும் அதன் துணை நிறுவனங்களும் உறுதி செய்கின்றன. அதே சமயம், நாட்டிலுள்ள அதிக எண்ணிக்கையிலான மலாய் அரசியல்வாதிகளும் இதற்குப் பெரும் துணையாக உள்ளனர்.
ஆனால், இதே போன்று, பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள சிறுபான்மையினரின் சவால்களைத் தீர்ப்பதில் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.
எடுத்துக்காட்டாக, ஒரு தேர்தல் முடிந்து, மற்றொரு தேர்தல் எனப் பல தேர்தல்கள் வந்தும், இந்தியர்களின் சிக்கல்கள் பெருமளவு அப்படியேதான் உள்ளன.
முதன் முதலாக, ஏப்ரல் 2017-இல் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்ட இந்தியர்களுக்கான பெருந்திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த இவ்வாறான முயற்சிகள் யாவும் கற்றோரின் முன்னெடுப்பாகவோ, சமூக இயக்கங்களின் முயற்சியாகவோ, அரசியல் கட்சிகளின் முன்னெடுப்புகளாகவோ மட்டுமே இருந்துள்ளன.
மலேசியாவில் சிறுபான்மையினரின் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இரண்டு சாராரின் உள்ளீடுகள் தேவையாக உள்ளன.
முதலாவதாக, அச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தீர்க்கமான மாற்றங்களைச் செய்யும் முனைப்புடைய அரசும் அதன் அமுலாக்கமும்; அடுத்து, அச்சிக்கல்களை புரிந்து கொண்டு, அவற்றிற்கான மாற்றங்களை முனைப்புடன் முன்னெடுத்துச் சென்று தீர்க்கும் வல்லமை உடைய மக்கள் பிரதிநிதிகள் அல்லது நிகராளிகள்.
முன்னாள் பிரதமர் நஜிப், இந்தியர்களுக்கான பெருந்திட்டத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றத் தாமே இதற்கான அமைச்சரவைக் குழுவிற்குத் தலைமை ஏற்றார். அதே சமயம், நிதி அமைச்சின் தலைமைச் செயலாளரை, இத்திட்டங்களைச் செயல்படுத்தும் ஆலோசனைக் குழுவிற்குத் தலைமை ஏற்க செய்து, அரசு ஊழியர்கள் திட்டங்களைச் சரிவரச் செயல்படுத்துகின்றனரா என்பதனைக் கண்காணிக்கும்படி பணித்தார்.
ஆனால், 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசு மாற்றத்தால் இந்தியர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் வழிமுறைகளிலும் மாற்றங்கள் நிகழலாயின. பிரதமர் அலுவலகத்தின் கீழ் இருந்த இந்திய உருமாற்றுத்துறை, ஒற்றுமைத்துறை அமைச்சின் கீழ் வைக்கப்பட்டது.
இவ்வாறு வைக்கப்பட்டதால், அதன் முக்கியத்துவம் இழந்து, இந்தியர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள் தீர்க்கப்படாமல் தொடர்கின்றன.
மேலிருந்து அழுத்தம் கொடுக்கப்படாமல் போனால், இந்தியர்களின் சிக்கல்கள் தீரும் என எதிர்பார்க்க முடியாது. எனவே, தேர்ந்தெடுக்கப்படும் இந்தியப் பிரதிநிதிகள், தீர்வுகளுக்குத் தேவையான மனத் திட்பத்தையும் மன உறுதியையும் கொண்டிருக்க வேண்டும். இதனை அடைய, இந்த நிகராளிகள் இந்தியர்களின் சிக்கல்கள் தொடர்பான ஆழ்ந்த புரிதலையும், அவற்றைத் தீர்ப்பதற்கு ஏற்ற திறன்களையும் கொண்டிருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்தி, அரசுத் துறைகளின்வழி அத்தீர்வுகளைச் செயல்படுத்த வேண்டும்.
இங்குதான் சிக்கல் உள்ளது. இத்தகைய ஆற்றல் கொண்டவர்கள் மிகவும் அரிதாகவே, குறைவாகவே உள்ளனர். இந்தியச் சமூகத்தினைப்பற்றிய தெளிவான புரிதலும், அவற்றைத் தீர்க்கும் வேட்கையும் மிக்கவர்களாக வெகு சிலரே உள்ளனர். அவர்களுக்கும் இன்னும் கூடுதலான ஆதரவு தேவையாக உள்ளது.
எனவே, ஆளும் அரசில் இந்தியர்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் முனைப்புக் காட்டுவோர் தேவைப்படுகின்றனர்.
இப்போதைய நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அதிகமான இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களிடையே உள்ள ஒத்துழைப்பின்மையும் பிரிவினை வாதமும் மிக்க அரசியல் நடைமுறைகளினாலும் இந்தியர்களின் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படாமலே தொடர்கின்றன.
இந்தச் சூழலில்தான் உதட்டளவில் சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு சிலர் உள்ளனர். தேர்தல் காலத்தில் பரிசளிப்புகளைக் கொடுப்பதை புலனத்தில் பதிவேற்றம் செய்துவிட்டு, இந்தியர்களின் சிக்கல்கள் தீர்ந்துவிட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். அவர்களின் சுய அரசியல் பிழைப்பிற்காக இந்தியர்களின் சிக்கல்களுக்கு உண்மையான உருப்படியான தீர்வுகளுக்கான முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் செய்வதில்லை.
இத்தகைய அரசியல்வாதிகள் இந்தியச் சமுதாய முன்னேற்றத்தின் துரோகிகளாவர்.
மலேசியாவில் இந்திய மக்கள் பிரதிநிதிகள், இந்தியர்களின் மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் எனக் கூற வரவில்லை. ஆனால், அவர்கள் ஒட்டு மொத்த இந்தியச் சமுதாயச் சிக்கல்களில் சற்றுக் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்த வேண்டும் என்கின்றோம்.
இறுதியாக, முன்னர் குறிப்பிட்டது போன்று, இந்தியச் சமுதாயச் சிக்கல்களை உள்ளபடியே தீர்க்கும் வேட்கையும், ஆற்றலும் உள்ளவர்களையே இந்திய வேட்பாளர்களாக அரசியல் கட்சிகள் முன்மொழிய வேண்டும்.
இந்தியர்களின் நாடித் துடிப்பை அறிந்த, இந்தியச் சமுதாயத்தின் அடிமட்டத்தில் சேவை செய்து கொண்டிருக்கும் ஆற்றல் மிக்க பலர் இந்திய அரசு சாரா இயக்கங்களில் உள்ளனர். அவர்களுள் ஏற்றவர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களத்தில் நிறுத்துங்கள். ஆற்றலும் ஏற்ற திறனும் கொண்ட இத்தகையோர் இந்தியச் சமுதாயத்தின் இன்றையச் சிக்கல்களுக்குகான அரசியல் தீர்வை காண ஆவேசம் கொண்டவர்கள். கட்சி அரசியலில் குளிர்காயும் அரசியல்வாதிகள் அல்ல.
– எஸ். பி. நாதன் – முன்னாள் EWRF தலைவராவார்.