சீனா போர் பயிற்சி எதிரொலி- தைவானில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அச்சம்

25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது.

ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார்.

25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது.

தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர். கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது. இதனால் எந்த நேரமும் தைவான் மீது சீனா போர் தொடுக்கலாம் என்ற பீதி உருவாகி உள்ளது.

பொது மக்களும் என்ன நடக்கப் போகிறதோ தெரிய வில்லையே என்ற அச்சத்தில் உள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.

ரஷியா-உக்ரைன் போரை தொடர்ந்து சீனா-தைவான் இடையே போர் மூளும் அபாயம் இருப்பதால் சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் தகவல் தொடர்பு ஒருங் கிணைப்பாளர் ஜான் கிர்பி கூறியதாவது:- ஒரே இரவில் தைவான் நீர்ச்சந்தி பகுதியில் சீனா 11 பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி உள்ளது. இது தீவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

நான்சி பெலோசியின் வருகையை சாக்கு போக்காக சொல்லி சீனா ஆத்திரமூட்டும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. இதை அமெரிக்கா ஏற்கனவே எதிர்பார்த்தது தான்.

சீனா என்ன செய்ய விரும்புகிறதோ அதற்கு அமெரிக்காவும் தயாராக உள்ளது. நெருக்கடியை நாங்கள் தேட மாட்டோம், விரும்பவும் மாட்டோம். தைவானின் நலன் மற்றும் பிராந்தியத்தின் நலன் மட்டுமே எங்களது குறிக்கோள். மேலும், பதட்டங்களை அதிகரிக்க அனுமதிக்க நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

-mm