டிஏபி புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் எட்வர்ட் லீ இன்று காலை காலமானார். அவர் சில காலமாகவே புற்று நோயால் சிரமப்பட்டு வந்ததாக அவரது நண்பர் ஒருவர் கூறினார்.
64 வயதான லீ சுற்றுலா, பயனீட்டாளர் விவகாரம், சுற்றுச்சூழல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் எலிசபத் வோங்-குடன் அவர் பணி புரிந்து வந்துள்ளார்.
“எட்வர்ட் என் ஆட்சி மன்ற உதவியாளர். பெடாலிங் ஜெயா ஊராட்சி மன்றத் திட்டம் 1, புக்கிட் காசிங்கை காப்பாற்றும் இயக்கம் ஆகியவற்றில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பணியாற்றிய போது அவரைச் சந்தித்தேன். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட சமூகப் போராளி,” என வோங் இன்று தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.
சமூகத் தலைவரான லீ 2008ம் ஆண்டு பொதுத் தேர்தலில் புக்கிட் காசிங் மாநில சட்டமன்றத் தொகுதியில் தேர்வு பெற்றார்.
அவர் கெரக்கானிம் டாக்டர் லிம் துவாங் செங்-கை 8,812 வாக்குகள் பெரும்பான்மையில் தோற்கடித்தார்.
சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம் தனது தவணைக் காலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை முடித்து விட்டதால் அந்த புக்கிட் காசிங் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
அடுத்த பொதுத் தேர்தலில் தான் அந்த இடம் நிரப்பப்படும்.