மலேசியாவில் ஊழலை அகற்ற இயலுமா?

இராகவன் கருப்பையா – நம் நாட்டை மட்டுமின்றி உலகையே உலுக்கிய 1MDB ஊழல் விவகாரம் தொடர்பான நீதிமன்ற நிகழ்வுகள் இன்னமும் நிறைவு பெறாமல் இருக்கும் நிலையில் மற்றொரு மேகா ஊழல் சம்பவம் அம்பலமாகி மக்களை உறைய செய்துள்ளது.

தொடர்ந்தார் போல இதுபோன்ற விசயங்களைக் கேட்டுக்கேட்டு அலுத்துப் போய்விட்ட மக்கள் இந்நாட்டுக்கு ஊழல்வாதிகளிடமிருந்து விடுதலையே கிடையாதா என்று கூட நினைக்கத் தோன்றும்.

மலேசிய கடற்படைக்குப் போர்க் கப்பல்கள் வாங்குவதற்கு சுமார் 11 ஆண்டுகளுக்கு முன் ஒரு தனியார் நிறுவனத்திடம் 6 பில்லியன் ரிங்கிட் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரையில் ஒரு துரும்பையும் காணவில்லை என்பதுதான் வேடிக்கை.

அந்த சமயத்தில் நஜிப் பிரதமராகவும் தற்போதைய அம்னோ தலைவர் அஹமட் ஸாஹிட் தற்காப்பு அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட அந்த போர்க் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான அளிப்பானை ‘டெண்டர்’ ஏதும் இல்லாமல் ‘போஸ்தெட் நேவல் ஷிப்யார்ட்’ எனும் தனியார் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற சிறப்புக் குழுத் தலைவர் வொங் கா வோ கடந்த வாரம் அம்பலப்படுத்தினார்.

அந்த அளிப்பானைத் தொடர்பாக அச்சமயத்தில் கடற்படைத் தலைவராக இருந்த அஸிஸ் அனுப்பிய பல கடிதங்களை அரசாங்கம் உதாசினப்படுத்தியது என்றும் நம்பப்படுகிறது.

இவ்விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாக ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படும் விசயத்தில் அரசாங்கம் தலையிடாது என பிரதமர் சப்ரி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இருந்த போதிலும் இதன் தொடர்பான குற்றச்சாட்டு, நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு போன்ற அனைத்து விசயங்களும் நிறைவு பெறுவதற்கு எவ்வளவு காலம் படிக்கும், அதற்குள் எத்தனை அரசாங்கம் மாறும் என்று கூட யாருக்கும் தெரியாது.

நிலைமை இவ்வாறு இருக்க, பெரும்பாலான சமயங்களில் இது போன்ற ஊழல்களில் சம்பந்தப்படும் பெரும் புள்ளிகள் தண்டிக்கப்படுவதில்லை. கீழ் நிலையில் உள்ளவர்கள்தான் நீதிமன்றம் ஏறுவதை பார்க்கிறோம்.

பெரும்புள்ளிகள் மக்கள் பணத்தைக் களவாடுவதற்கு இந்நிலை ஒரு உந்துதலாக இருக்குமோ என்று கூட நமக்கு எண்ணத் தோன்றுகிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் முறையாக தண்டிக்கப்பட்டால்தானே குற்றச் செயல்கள் குறையும்!

உதாரணத்திற்கு, தடுப்புக்காவல் மரணங்கள் இன்னமும் ஒரு தொடர்கதையாகவே உள்ளது. நான்கு சுவருக்குள் கைதிகளைக் கொடூரமாக அடித்துக் கொல்லும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்படுவதாகத் தெரியவில்லை. அவர்களுக்கும் இது நன்றாகவேத் தெரியும். அந்த துணிச்சல்தான் அவர்களுடைய அராஜகத்திற்கு உரமாக உள்ளது.

ஆக, நம் நாட்டில் மக்கள் பணத்தை களவாடும் பெரும் புள்ளிகள் முறையாகத் தண்டிக்கப்படாத வரையில் மேகா ஊழல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கப் போவதே இல்லை.

மனசாட்சியை புறம் தள்ளிவிட்டு துணிச்சலாகத் திருடும் இவர்களுக்கு சட்டத்தைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை இல்லை. வேலி இல்லாத பயிர்களை மேயும் கால்நடைகளைப்போல்தான் இருக்கும் இவர்களுடைய போக்கு.

சட்டத்தை இருட்டறையில் பூட்டி அரசியல் பலத்தை முன்னிறுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனும் தைரியத்தில் நம் நாட்டு அரசியல்வாதிகளில் பலர் தொடர்ந்து மக்கள் பணத்தைச் சூறையாடி வருகின்றனர் என்பது எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அதே திருடர்கள் மீண்டும் மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்வதுதான் இந்நாட்டில் நடக்கும் வினோதம்!

அதோடு இனவாத அரசியலை அதிகாரமாக்கும் அரசியலமைப்பு சட்டங்களும், இனவாத அடிப்படையில் ஆளும் அதிகாரம் முற்றாகக் குத்தகைக்கு விடப்பட்ட நிலையில், அது தன்னையே அழிக்கும் ஒரு புற்று நோயாக உருவாகி வருவதை அறிவு சார்ந்த மலாய் சமூகம் உணர வேண்டும்.

வேலி முற்றாக பயிரை மேயும் போது, போராட்டம் நடக்கும், ஆனால் அது வரை பொறுக்க வேண்டுமா? இலங்கை அனுபவம் ஒரு பாடமல்லவா?