ஹசான் சொல்வது “முற்றிலும் அபத்தமானது” என ஆயர் சாடுகிறார்

கிறிஸ்துவ அமைப்பு ஒன்று அந்நிய உதவியுடன் முஸ்லிம்களுடைய நம்பிக்கையை கீழறுப்புச் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் டாக்டர் ஹசான் அலி கூறிக் கொள்வதை “முற்றிலும் அபத்தமானது” என கத்தோலிக்க ஆயர் டாக்டர் பால் தான் சீ இங் வருணித்துள்ளார்.

“அந்த கிறிஸ்துவ கீழறுப்புவாதிகளின் செயல் முறை என அவர் கூறிக் கொள்வதிலிருந்து அது எவ்வளவு அபத்தமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்,” என மலாக்கா ஜோகூர் கத்தோலிக்க திருச்சபையின் தலைவருமான அவர் சொன்னார்.

“முஸ்லிம்களை அவர்களுடைய சமயத்திலிருந்து விலகச் செய்வதற்காக முஸ்லிம் தொழுகை மையங்களில் கிறிஸ்துவ சமய போதகர்கள் இஸ்லாமிய ஆடைகளை அணிந்து கொண்டு தொழுகையில் ஈடுபடுவதாக ஹசான் சொல்கிறார்,” என ஆயர் குறிப்பிட்டார்.

“கிறிஸ்துவராக இருக்கும் ஒருவர், கிறிஸ்துவ தெய்வீகத் தன்மையையே மறைமுகமாக மறுக்கும் தொழுகையில் எப்படி ஈடுபட முடியும்? அப்படிச் செய்யும் வேளையில்  அவர் எப்படி கிறிஸ்துவராக இருந்து கொண்டு சமயத்திற்காக மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்?” என ஆயர் பால் தான் வாதாடினார்.

“அது உண்மையில் முற்றிலும் அபத்தமானது. தாங்கள் புனிதமாகக் கருதும் நோக்கங்களை அடைய தவறான வழிகளைப் பயன்படுத்துவதிலிருந்து கிறிஸ்துவர்கள் தடை செய்யப்பட்டுள்ளனர்.”

“தான்தோன்றிகளும் கம்யூனிஸ்ட்களும், பாசிசவாதிகளுமே முடிவுகளுக்கு நியாயம் கற்பிப்பர். புனிதமான நோக்கங்களை அடைவதற்கு கிறிஸ்துவர்கள் தவறான வழிகளைப் பின்பற்றக் கூடாது.”

“அவர்களைப் பொறுத்த வரையில் வழிகளுக்கும் முடிவுகளுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கக் கூடாது,” என முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக பூச்சாண்டி காட்டுவதை அண்மையில் ஹசான் தொடங்கியுள்ளது குறித்துக் கருத்துரைத்த போது ஆயர் பால் தான் கூறினார்.

“கிஞ்சித்தும் ஆதாரமில்லை”

“வழக்கம் போல முஸ்லிம்களுடைய நம்பிக்கையை தீவிரமாக கீழறுப்புச் செய்து வருவதாக தாம் கூறும் கிறிஸ்துவ அமைப்பை ஹசான் அடையாம் காட்டவில்லை.”

“டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் மையத்தில் முஸ்லிம்கள் கிறிஸ்துவ சமயத்துக்கு மாற்றப்படுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தாம் கூறிக் கொண்ட அவமரியாதையான மறைமுகமான இயக்கத்தை அவர் இன்னும் தொடருகிறார்.”

“இதுகாறும் அந்தக் கூற்றுக்கு ஆதரவாக ஒரு சிறிய ஆதாரம் கூட தரப்படவில்லை. ஆனால் அந்த மனிதர் ஒய்வதாகத் தெரியவில்லை”, ஆயர் பால் தான் குறிப்பிட்டார்.