பேச்சு சுதந்திரம் சமயங்களைக் கொச்சப்படுத்த அல்ல!

கி. சீலதாஸ் – நமது பேரரசர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பிலா ஷா நடந்து முடிந்த வீரர்கள் தின விழாவில் தமது உரையில் சமயங்களைச் சிறுமைப்படுத்துவது, கேலி செய்வது, அவமதிப்பது போன்ற நடவடிக்கைகள் கூடாது என்ற ஆணையை வெளியிட்டார். தகவல் ஊடகங்களில் “ஆணை” என்று குறிப்பிட்டிருந்தது. எனவே, அதே மொழியை இங்கே பயன்படுத்தப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பேச்சு சுதந்திரத்தைப் பயன்படுத்த தயங்க மாட்டார்கள். எனவே, பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சமயத் தூற்றல் கூடாது என்றார். சமயத்துவேஷம் மொழிகள் வேண்டாமென்ற பேரரசர் அத்தகைய நடவடிக்கைகள் இனத்துவேஷம் பரவுவதற்கு உதவுவதோடு பல்லின மக்களிடையே நிலவும் கூட்டுணர்வு அழிந்துவிடும் எனவும் எச்சரித்தார்.

இந்த வீரர்கள் தின விழாவில் அரசியார், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கூப் உட்பட அரசியல் தலைவர்களும், மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள். பேரரசரின் போற்றத்தக்க கருத்து, ஆணை பொது மக்களுக்கு மட்டுமல்ல அரசியல் சமயவாதிகளுக்கும் மிக பொருத்தமான தேவையாகும். ஏனெனில், இந்தக் காலகட்டத்தில் சமயங்களைப் பழிப்பது, இழிப்பது, வசைப்பாடுவது, தூற்றுவது சில அரசியல்வாதிகளின் கேவலமான வாழ்க்கையாகும்.

சமயங்களைக் குறித்து பிசகான அபிப்பராயம், கேவலமான கருத்து மொழிவது பல்லின நாட்டுக்கு உதவாத கலாச்சாரமாகும். பிரதமரும் சரி, மற்ற அரசியல் தலைவர்களும் சரி சமயத்துவேஷப் பேச்சுக்கு இடமளிக்கக்கூடாது. இப்படிப்பட்ட நடவடிக்கையை அரசியல் கட்சிகள் தங்களின் உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கற்பிக்கலாம், வலியுறுத்தலாம். அதே வேளையில் மத, சமயத் தலைவர்களும், சமயப் போதகர்களும் பேரரசரின் அறிவுரையை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு நடந்து கொள்ள வேண்டும். சமயத்துவேஷப் பேச்சுகளைக் கைவிட வேண்டும்.

பல இனங்கள் வாழும் இந்த நாட்டில் பல சமயங்கள் உள்ளன. எல்லா இனத்தவர்களும் ஒற்றுமையாகவும், புரிந்துணர்வோடு வாழ்வதற்கு உதவுவது புரிந்துணர்தல்தான். இன, சமயப் பந்தம் வளர்வதில் கவனம் தேவையே அன்றி நட்பில் சந்தேகம், பிளவு, வெறுப்பு, பகைமையைத் தூண்டிவிடும் பேச்சுகளும், நடவடிக்கைகளும் அல்ல.

இன்று நாட்டில் பகிரங்கமாக நடக்கும் இனத்துவேஷப் பேச்சு வேதனை தருகிறது. சமயத்துவேஷம் கட்டுங்கடாத அளவுக்கு வளர்ந்து வரும் கலாச்சாரமாகிவிட்டது. அமலாக்கத்துறை பாரா முகத்தோடு நடந்து கொள்வது நாட்டில் நல்லிண்ணம் வளர உதவாது.

பல்லின மக்கள், பல மொழிகளைப் பேசும் மக்கள், பல சமயங்களைப் போற்றி மதிக்கும் மக்கள், பல பண்பாடுகளைப் பேணும் மக்களைக் கொண்ட நாடாக மலேசியா ஒரு காலத்தில் பிரகாசித்தது. வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒற்றுமை சிந்தைதான் முக்கியம் என்று வாழ்வோர் மலேசியர்கள் என்ற பெருமையைத்தான் காலங்காலமாய் மலேசியர்கள் ஈட்டிக் கொண்டனர். பகைமையை ஒருபோதும் சக்திகளுக்கும் இடமளிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இன்று அந்நிலை மாறிவிட்டது. சமய வெறுப்பு வெகு வேகமாகப் பரவுகிறது.

சுதந்திரத்துக்கு முன்பும், அதற்குப் பின்பும் ஆட்சியில் இருந்த ஒரே கட்சி இனப் புரிந்துணர்வு நெறியை வளர்க்க தவறிய பரிதாப நிலையைத்தான் கண்டோம். மறுபடியும் கண்டு கொண்டிருக்கிறோம். இந்த அவலநிலைக்கு மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்றால் அது அவர்களின் தலையெழுத்து. அவர்கள் ஏற்றுக்கொண்ட முறை என்று சொல்ல தகுமா? சமீபத்தில் பெரும் வெள்ளத்தில் பாதிப்புற்ற மக்கள் அந்தச் சங்கடமான சம்பவத்தை இறைவனின் செயல் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும் என மாநிலத் தலைவர் சொன்னதை என்னவென்பது? அரசும் உணராமல் செயல்படலாமா?

சமயத்துவேஷ கலாச்சாரம் பரவுவதற்குப் பலம் வாய்ந்த சக்திகள் நாட்டில் இயங்குவதைக் கண்டும் கண்டு கொள்ளாதது போல் நடந்து கொள்வது இன, சமய ஒற்றுமைக்கு உதவாது என்பதை மக்கள் உணர மறுப்பது விசித்திரமே! அரசும் உணராமல் செயல்படலாமா?

அத்தகைய நடத்தையை விசித்திரமான அணுகுமுறை என்பதா அல்லது பொறுப்பற்றவர்களின் தகாத அணுகுமுறை என்பதா? அமலாக்கத்துறையின் விசித்திரமான போக்கு நம்மை வியப்பில் மட்டுமா ஆழ்த்துகிறது? அது நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது என்றால் மிகையாகாது.

நாட்டில் பகைமை உணர்வை வளர்ப்பதில் காட்டப்படும் கரிசனம் துயர்மிகுந்த விளைவுகளுக்கு வித்திடலாம் என்பதை ஏற்க மறுக்கும் சக்திகளைத்தான் பார்க்கிறோம். இந்த அழிவுச் சக்திகளுக்கு மக்களிடையே ஒற்றுமை உணர்வு வளர்வதைத் தடுப்பதில்தான் ஆர்வமெல்லாம். ஆங்கிலேயன் பிரித்தாளும் அரசியலில் கைதேர்ந்தவன். அவனை நம்பி மோசம் போன ஏமாளிகள் கணக்கிலடங்கா. அவன் விட்டுப்போன அரசியல் சொத்துதான் பிரித்தாளும் தத்துவம்.

அந்தத் தத்துவத்தில் கைதேர்ந்தவர்கள்தான் இன்று அரசியல் தலைவர்களாக, ஆட்சி  தலைவர்களாக அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு பகை உணர்வு அரசியல் கலாச்சாரத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே, பல இனங்களிடையே புரிந்துணர்வு, நட்புறவு வளர்வது அவர்களுக்குப் பிடிக்காது, ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் அரசியல் கொள்கை. எனவே, மக்கள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரிந்து இருக்கிறார்களோ அதுவே நாணயமற்ற அரசியல்வாதிகள் விரும்பும் நிலை.

சமயத்தை நம்பி அரசியல் வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், இன அரசியலுக்கு இடமளித்து அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக்கிக் கொண்டவர்கள் நினைப்பது போல், எதிர்பார்ப்பது போல் எக்காலமும் மக்கள் போதைப் பொருள் உண்டவர்கள் போல நெடுங்காலம் இருக்க மாட்டார்கள். இதுவரையில் நாட்டின் செல்வத்தை, மக்களின் வரி பணத்தைத் தவறான வழியில், ஊழல் வழியில் செலவழித்தது ஒரு பக்கம்; லாபம் கண்டவர்கள் மறுபக்கம்.

இவ்வாறாக நாட்டைச் சுரண்டுவதில் மிகுந்த ஆர்வமுடையோர், ஆற்றலுடையோர் முறைகேடான நடவடிக்கைகளில் பங்கு பெற்றிருப்பதைக் காண்கிறோம். இது நீடிக்காது, நீடிக்கக்கூடாது. தகாத செயல்களில் பங்கு பெறுவர். மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்ற நினைப்பிற்கு மக்கள் சாவு மணி அடிக்க தயாராகிவிட்டார்கள். இதை அரசியல்வாதிகள் உணர்வது மேல்.

நடந்து முடிந்த இங்கிலாந்தின் காமென்வெல்த் விளையாட்டுகளில் மலேசியாவுக்கு நல்ல மதிப்பை ஈண்டு தந்தனர் மலேசிய விளையாட்டாளர்கள். அந்த விளையாட்டாளர்கள் மலேசியர்களாகப் பங்கு பெற்று வெற்றி வாகை சூடினார்கள். இன, சமய வேறுபாடுகளை நினைக்காமல் ஆதரித்து மகிழ்ந்தார்கள் மலேசியர்கள். மலேசிய விளையாட்டாளர்கள் தோல்வியால் துவண்டபோது மலேசியப் பார்வையாளர்களின் நெஞ்சம் கசிந்ததைக் காண முடிந்தது. அதுதான் மலேசியர்களின் உண்மையான மலேசிய உணர்வு. பார்வையாளர்கள் விளையாட்டாளர்களின் இனத்தைப் பார்க்கவில்லை. சமயத்தைப் பார்க்கவில்லை. மலேசியக் கொடியை ஏந்திய மலேசியர்களைத்தான் பார்த்தார்கள்.

இது தான் மலேசிய உணர்வு. அரசியல் தலைவர்களுக்கு இது பொருந்தாத சமுதாய நல்லிணக்க ஒளடதம். அவர்களை நம்ப வேண்டாம். அவர்கள் இன, சமயத்துவேஷ நோயால் பாதிப்புற்றவர்கள். அது சீக்கிரத்தில் குணமாகாது. இளம் தலைமுறையினர் பொறுப்பேற்றால் நாட்டுக்கு விடிவுகாலம் உண்டு என்று உறுதியாகச் சொல்லலாம்.

பேரரசரின் அறிவுரை அரசியல்வாதிகளின் காதுகளுக்கு எட்டியதா என்பதைப் பார்ப்போம்.