கடுமையான சவாலில் மலேசிய நீதித்துறை   

இராகவன் கருப்பையா- கடந்த சில தினங்களாகக் கூட்டரசு நீதிமன்றத்தில் நடைபெறும் முன்னாள் பிரதமர் நஜிப் சம்பந்தப்பட்ட வழக்கின் நிகழ்வுகள் வரலாறு காணாத அளவுக்கு ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தையும் ஒருசேர ஈர்த்துள்ளது.

அவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் 42 மில்லியன் ரிங்கிட்  தொடர்பான ஒரு ஊழல் புரிந்துள்ளார் எனும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2020ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அவருக்கு 12 ஆண்டு சிறைத் தண்டனையும்  210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தது.

கடந்த ஆண்டு இறுதியில் மேல் முறையீட்டு நீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து இறுதி முயற்சியாகக் கூட்டரசு நீதிமன்றத்திற்கு வழக்கைக் கொண்டு சென்றார் நஜிப்.

வழக்கு விசாரணையை எந்த அளவுக்கு நீட்டிக்கச் செய்ய முடியுமோ அதற்கான அனைத்து முயற்சிகளையும் கடந்த 2 ஆண்டுகளாக எப்படியெல்லாம் அவர் மேற்கொண்டார் என்பது வரலாறு.

ஆனால் கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இறுதிக்கட்ட வழக்கு விசாரணையில் அத்தகைய ஜம்பம் எல்லாம்  இனிமேலும் எடுபடாது என்று சிறிதளவும் அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.

தனது வழக்கில் வாதாடுவதற்குப் பிரிட்டனிலிருந்து ஒரு வழக்கறிஞரைக் கொண்டுவருவதற்கு மே மாத இறுதியில் நஜிப் செய்த விண்ணப்பத்தைக் கூட்டரசு நீதிமன்றம் நிராகரிக்கும் என்றும் அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பிறகு ஜூலை மாத இறுதியில், 4 ஆண்டுகளுக்கும் மேல் தனக்காக வாதாடிய பழைய வழக்கறிஞர் ஷாஃபியை திடீரென நீக்கிவிட்டு புதிய வழக்கறிஞரை அவர் நியமித்த போது மக்களின் சந்தேகங்களும் ஆரூடங்களும் வலுக்க தொடங்கின.

ஷாஃபியை இந்த வழக்கிலிருந்து மட்டும்தான் அவர் நீக்கினாரே தவிரத் தனது மற்ற வழக்குகளில் அவருடைய பிரதிநிதித்துவத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே மக்களை அதிகம் சிந்திக்க வைத்தது.

புதிய வழக்கறிஞர்கள் தங்களுக்குக் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக முறையிட்டு, முதல் வேலையாக வழக்கை ஒத்தி வைக்க கோரினர். ஆனால் கூட்டரசு நீதிமன்றம் அதற்கு இணக்கம் தெரிவிக்க மறுத்த போது சம்பந்தப்பட்ட தரப்பினரும் நஜிபின் ஆதரவாளர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இதுவெல்லாம் மேல்மட்ட அம்னோ தலைவர்களுக்குச் சந்தோசத்தைக் கொடுத்ததா அல்லது வருத்தமளித்ததா என்று தெரியாது. ஏனெனில் கிட்டதட்ட எல்லாருமே மௌனம் சாதித்தனர்.

அம்னோ தலைவர்கள் மௌனம் காப்பதை விடுத்து நஜிபுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என உச்சமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைவர் அஹ்மட் ஸாஹிட் மற்றும் துணைத் தலைவர் முஹமட் ஹசான் போன்றோர் விழித்தெழுந்து நஜிபுக்கு ஆதரவாக அறிக்கை விடத் தொடங்கினார்கள்.

ஒரு வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது அது குறித்து வெளியே யாரும் எதிர்மறையாகக் கருத்துக் கூறக்கூடாது எனும் விசயம் தெரிந்திருந்தும் அப்படி அவர்கள் செய்தது நஜிபுக்கு பாதகத்தையே ஏற்படுத்தும்.

விசாரணையை ஒத்திப்போட இயலாத நிலையில், இவ்வழக்கிலிருந்து தான் விலக்கிக் கொள்ள விரும்புவதாக நஜிபின் புதிய வழக்கறிஞர் ஹிஷாம் தே செய்த முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்தது.

இத்தகைய சாதகமில்லாதத் திருப்பங்களை நஜிபும் அவருடைய வழக்கறிஞர்கள் குழுவும் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லைதான்.

ஆகக் கடைசியாக, தனது புதிய வழக்கறிஞர்கள் குழுவை நீக்கிவிட்டதாக அறிவித்த நஜிப், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று நாட்டு மக்கள் மட்டுமின்றி அயல் நாட்டு ஊடகங்களும் கூட ஆவலுடன் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றன.

கடந்த 4 ஆண்டுகளாகத் தனது அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி தன்னுடைய வசதிக்கு ஏற்றவாறெல்லாம் நீதிமன்றத்தை வளைத்து நெளித்து ஒடுக்கி வந்த நஜிப் இம்முறை ஒரு முட்டுக்கட்டையை எதிர்நோக்கியுள்ளதைப் போல் தெரிகிறது.

தனக்கு நீதி கிடைக்கவில்லை என நீலிக்கண்ணீர் வடித்து அவர் அனுதாபம் தேட முனையும் போதிலும், மிகக் குறைவானவர்களே அவருக்கு ஆதரவாக உள்ளது நன்றாகப் புலப்படுகிறது.

இவ்வழக்கில் நீதிபதிகளின் நடுநிலையான,  துணிச்சலான முடிவுகளை பெரும்பாலான மக்கள் பாராட்டுவதையும் நாம் கவனத்தில் கொள்ளத்தான் வேண்டும்.

அதே சமயத்தில் ஹிஷாம் தே நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்காமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொள்கிறார் என்று குற்றஞ்சாட்டும் பலர் அவர் மீது வழக்கறிஞர்கள் மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

எது எப்படியோ, திட்டமிட்டபடி வழக்கு விசாரணை வரும் 26ஆம் தேதி வரையில் நடைபெறும் என நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் நஜிபின் அடுத்தகட்ட நகர்வு அவருக்குச் சாதகமாக அமையுமா அல்லது அவர் சிறை செல்வதை உறுதி செய்யுமா என்று இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்.

இதற்கிடையே தலைமை நீதிபதி தெங்கு மைமூனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனக் காவல் படைத் தலைவர் அக்ரில் சானி அறிவித்துள்ளார்.

மிரட்டல் விடுத்தால் தலைமை நீதிபதி பயந்துவிடுவாரா என்ன? அறிவிலித்தனமான இத்தகைய செயல்கள் சம்பந்தப்பட்டோரின் சிறுபிள்ளைத்தனத்தையும் அறியாமையையுமே காட்டுகிறது.

நமது நாட்டின் நீதித்துறையின் மீது, களங்கம் கற்பிக்க முயலும் நஜீப்பின் போக்கும், அவரின் வழக்கறிஞர்களின் போக்கும் கண்டனத்திற்குரியது. அதோடு நாஜிப்புக்கு ஆதரவு நல்கும் தோணியில் அம்னோவின் சில தலைவர்கள் முயற்சி எடுப்பதை அம்னோவில் உள்ள ஆளுமை கொண்ட  தலைமைத்துவம் உடனடியாக கண்டிக்க வேண்டும்.

நாடு மலாய் இனத்தின் ஆதிக்கத்தில்தான் செயல்படும், இருப்பினும் அவர்கள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டாலும் அதனால் உண்டாகும் சிக்கல் அனைவரையும் பாதிக்கும்.

பாரதியின், நல்லதோர் வீணை செய்தே – அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? என்ற பாரதியின் வினா, உணர்வு கொண்டவர்களின் உள்ளத்தை நெருடும்.