தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளுக்கு பின்னர் மிகப்பெரிய கூட்டு இராணுவப் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளன.
வடகொரியா, புதிய அணுச் சோதனைக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இந்த இராணுவ பயிற்சிகள் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
தென்கொரியாவில் நடைபெறும் கோடைகால இராணுவப் பயிற்சிகள் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த மே மாதம் பதவியேற்ற தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஒருங்கிணைந்த பயிற்சிகளை வழமை நிலைமைக்கு கொண்டுவரும் அதேவேளை வடகொரியாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்துவதாக உறுதி அளித்திருந்த பின்னணியில் இந்தப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சில வழமையாக மேற்கொள்ளும் பயிற்சிகள் மீளெடுக்கப்பட்டிருந்ததுடன், அணுப் பேச்சுவார்த்தைகளும் முடங்கியுள்ள நிலையில், பாரிய அளவான இராணுவ பயிற்சிகளை இரண்டு நாடுகளும் முன்னெடுத்துள்ளன.
இந்த கூட்டு இராணுவ பயிற்சி தொடர்பான விரிவான விபரங்கள் வெளியிடப்படாத போதிலும் பல்லாயிரக்கணக்கான படையினருடன், விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் தாங்கிகளும் பயிற்சகளில் பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியுள்ள ஏவுகணை பரிசோதனைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தப் பயிற்சி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவங்கள் கூறியுள்ளன.
தயார்நிலையை அதிகரித்தல்
இதேவேளை அரசாங்கத்தின் தயார்நிலையை அதிகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட தனியான நான்கு நாள் பயிற்சியையும் தென்கொரியா ஆரம்பித்துள்ளது.
கொரோனா தொற்றுப் பரவல் ஆரம்பித்த பின்னர் முதல் முறையாக இவ்வாறான பயிற்சி நடவடிக்கையை தென்கொரியா மேற்கொண்டுள்ளது.
மாறிவரும் போரின் வடிவங்களுக்கு பொருந்தும் வகையில் நாட்டின் தயார்நிலையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்தப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தென்கொரிய அதிபர் கூறியுள்ளார்.
-ibc