நீதித்துறையின் நிமிர்வுக்கு வெகுசன மக்களே காரணம்

இராகவன் கருப்பையா- நாட்டின் நீதித்துறை இன்று தலை நிமிர்ந்து நிற்பதற்குக் கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 14ஆவது பொதுத் தேர்தல்தான் காரணம் என்பதில் சிறிதளவும் ஐயத்திற்கு இடமில்லை.

வீறுகொண்டு எழுந்து ஊழல் படிந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்குப் பொது மக்கள் அன்று செய்த தீர்க்கமான முடிவானது இன்று நமது நீதித்துறை வரலாறு காணாத உச்சத்தைத் தொடுவதற்கு வழிவகுத்தது எனும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது.

தன்னை யாரும் அசைக்க முடியாது எனும் ஆணவத்தில் கிட்டத்தட்டக் கொடுங்கோல் ஆட்சியைப் போலவே நாட்டை நிர்வகித்து வந்த நஜிபின் பாரிசான் அரசாங்கத்தை நாட்டு மக்கள் தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தி நொடிப் பொழுதில் புரட்டிப்போட்டனர்.

அத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கைப்பற்றியதால்தான் ‘உலக மகா திருடன்’ என அமெரிக்கா உள்படச் சர்வதேச நிலையில் பல நாடுகள் வருணித்த நஜிப்பை இப்போது சட்டத்தால் சிறையிலடைக்க முடிந்தது.

மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த அரசாங்கத்தைச் சுயநலமிக்க சில அரசியல் தவளைகள் கொல்லைப்புறமாக வந்து கவிழ்த்துப் பழையபடி ஊழல் அரசாங்கத்தையே மீண்டும்  ஆட்சியில் அமர்த்திய போதிலும் நீதித்துறையின் இன்றைய எழுச்சிக்கு விதை விதைத்தது பக்காத்தான்தான் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சுமார் 22 மாதங்களே நீடித்த போதிலும் நஜிப் உள்பட எண்ணற்ற ஊழல்வாதிகளை விரட்டிப் பிடித்து நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தியது பக்காத்தான் ஆட்சிதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

அவர்களில் சிலர் ஊழல் அரசாங்கத்தின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திச் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவிவிட்ட போதிலும் நஜிபை மட்டும் உடும்புப் பிடியாகச் சட்டம் பிடித்துக் கொண்டது.

விசாரணையை ஒத்திப் போட்டு, பொதுத் தேர்தலைத் துரிதப்படுத்தி, மீண்டும் முழுமையாக ஆட்சியைக் கைப்பற்றிப் பழைய நிலையை அடையத் துடித்த அவர் கடைசி நாள் வரையில் எவ்வாறெல்லாம் போராடினார் என்பதை உலகறியும்.

ஆனால் நீதித்துறையின் நீண்ட கைகள் அவரை நழுவவிடாமல் கவ்விக் கொண்டதைப் பார்த்துச் சந்தோஷப்படாதருவர் யாருமே இருக்க வாய்ப்பில்லை.

ஏனெனில் அவர் பிரதமராக இருந்த போது, ‘நானே ராஜா நானே மந்திரி’ எனும் நிலைப்பாட்டில், கேள்வி எழுப்பியர்கள் எல்லாரையும் வஞ்சம் தீர்த்தார்.

1MDB விவகாரத்தில் அவர்தான் குற்றவாளி என அமெரிக்க நீதித்துறையே அப்பட்டமாக அறிவித்துவிட்ட போதிலும் உள்நாட்டில் அதைப் பற்றிப் பேசிய அனைவர் மீதும் அவர் சீறிப் பாய்ந்தார். பல்கலைக் கழக மாணவர்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அந்த ஊழல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கருத்துரைத்த அப்போதைய காவல் துறை துணைத் தலைவர் ஹமிட் படோர் சம்பந்தமே இல்லாத பிரதமர் துறைக்கு மாற்றப்பட்டார்.

தன்னை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்குக் குற்றப் பத்திரிகை தயார் செய்த அப்போதைய சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டாயலை உடனே பதவி நீக்கம் செய்தார். அதுமட்டுமின்றி அவருக்குப் பதிலாக அப்பதவிக்குக் கொண்டு வரப்பட்ட அப்பாண்டி, முதல் வேலையாக ‘நஜிப் நிரபராதி’ எனும் அறிவிப்பைச் செய்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதையும் நாம் இன்னும் மறக்கவில்லை.

1MDB விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பிய அப்போதைய துணைப்பிரதமர் முஹிடின் அந்த உயர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தூக்கியெறியப்பட்டார். மற்றொரு அமைச்சர் அமைச்சர் ஷாஃபி அப்டால் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்.

அந்த ஊழல் தொடர்பாகக் கேள்வி கேட்ட 2 ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்களைச் சிறையில் அடைத்தார். ‘சரவாக் ரிப்போர்ட்’ எனும் மின்னியல் ஊடக ஆசிரியர் ரூகாசல் ப்ரௌனை கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.

ஆனால் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்த பிறகு அவருடைய கொட்டம் அடங்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக லத்திஃபா கோயா, காவல் படைத் தலைவராக ஹமிட் பாரோர்  மற்றும் சட்டத்துறை தலைவராக டோமி தோமஸ், ஆகியோர் நியமனம் பெற்ற மறுகணமே ஊழல்வாதிகளுக்கு எதிரான மாபெரும் வேட்டைத் தொடங்கியது.

கோலாலம்பூர் காவல் படைத் தலைவராக இருந்த அமார் சிங் தலைமையிலான குழு நஜிபின் வீட்டிற்குள் புகுந்து மில்லியன் கணக்கான ரிங்கிட் மதிப்புடைய பொருள்களையும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தையும் பறிமுதல் செய்தது வரலாறு.

ஆட்சி மாறவில்லையென்றால் இதுவெல்லாமே நிச்சயம் சாத்தியமாகி இருக்காது என்பதை மறுப்பார் யாருமில்லை.

அந்தச் சமயத்தில் வளைத்துப் பிடிக்கப்பட்ட மேலும் பலருடைய ஊழல் வழக்குகள் இன்னும் நிலுவையிஸ் உள்ளன. கிட்டத்தட்ட அவர்கள் அனைவருமே மீண்டும் பாரிசானின் முழுமையான ஆட்சிக்குக் காத்திருப்பதில் ஆச்சரியம் இல்லை.

ஆனால் அவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் இருப்பதற்கும் புதிய ஊழல்வாதிகள் உருவாகாமல் இருப்பதற்கும் ஆட்சி மாற்றம் மிகவும் அவசியம் என்பதை நஜிபின் சிறை தண்டனை நமக்கு மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது.