பேரணி மசோதா: செனட்டர்களுக்கு ஒரு திறந்த மடல்

செனட்டர் அவர்களுக்கு,

மலேசிய வழக்குரைஞர் மன்றம், 2011,அமைதிப் பேரணி சட்ட முன்வரைவை, அது கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் உரிமைக்கு நியாயமற்ற, பொருத்தமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பதற்காக எதிர்க்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

அந்தச் சட்டமுன்வரைவில், நடப்புச் சட்டத்தில் உள்ளதைவிட கெடுபிடிகள் அதிகம். எடுத்துக்காட்டுக்கு ‘தெரு ஆர்ப்பாட்டங்களுக்கு” (ஊர்வலங்களுக்கு)த் தடை விதிக்கப்பட்டுள்ளது; ஒன்றுகூடலை எங்கு, எப்போது நடத்தலாம் என்பதை போலீஸ்தான் முடிவுசெய்யும் என போலீசுக்கு அளவற்ற அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர, அறிவுக்குப் பொருந்தாத சில விதிகளும் அதில் உள்ளன. எடுத்துக்காட்டுக்கு சமயக் கூட்டங்கள் பற்றி போலீசுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டியதில்லை.ஆனால், அப்படி ஒரு கூட்டத்தைத் தொழுகை இல்லங்களில் நடத்த முடியாது.

மேலும், ஒரு பாலர்பள்ளி அல்லது பள்ளிக்கூடத்துக்கு 50மீட்டர் தொலைவுக்குள் வசிக்கும் ஒருவர் விழாக்காலங்களில் திறந்த இல்ல உபசரிப்பையோ, திருமண உபசரிப்பையோ, சவ ஊர்வலத்தையோ நடத்த முடியாது.  

அச்சட்ட முன்வரைவு “பன்னாட்டு விதிமுறைகளை” ஒத்ததாகவோ அரசமைப்பின் உயரிய நிலைக்கு ஏற்புடையதாகவோ, சட்ட ஆளுமைக்கு ஏற்புடையதாகவோ, அடிப்படை மனித உரிமைகளையும் தனிப்பட்டவர் உரிமைகளையும் மதிப்பதாகவோ இல்லை.

பேரணிகூடி ஊர்வலம் செல்வதைத் தடுப்பது மட்டுமீறிய செயல்.

ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் விரிவான பார்வையாளர் கூட்டத்தைச் சென்றடைய உதவுகின்றன. ஆர்ப்பாட்டக்காரர்களின் நோக்கங்களையும் மனக்குறைகளையும் பலரும் அறிய வாய்ப்பு கிட்டுகிறது. அமைதியான ஊர்வலங்கள் மாற்றத்தையும் நன்மைகளையும் கொண்டு வந்திருப்பதற்கு வரலாற்றில் சான்றுகள் நிரம்பிக் கிடக்கின்றன.

1946, பிப்ரவரி 27-இல், அம்னோ நிறுவுனரும் இப்போதைய உள்துறை அமைச்சரின் தாத்தாவுமான ஒன் ஜப்பார் (இடம்),15,000பேருக்குத் தலமைதாங்கி மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் மலாய்க்காரர் நலன்களைப் பொருட்படுத்தாத மலாயன் யூனியன் திட்டத்தை எதிர்த்து ஊர்வலம் சென்றார்.

அதன் நினைவாக 2008, பிப்ரவரி 27-இல், அப்போதைய பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, 20,000பேருக்குத் தலைமையேற்று பத்து பஹாட் அம்னோ அலுவலகக் கட்டிடத்திலிருந்து 1கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விளையாட்டரங்குக்கு ஊர்வலம் சென்றார்.

மலேசிய வழக்குரைஞர் மன்றம், 2007, செப்டம்பர் 26-இல், வி.கே. லிங்கம் வீடியோ விவகாரம் பற்றி விசாரிக்க அரச ஆணையமும் நீதிபதிகள் நியமன ஆணையமும் அமைக்கப்பட வேண்டும் என்று கோரி “நீதிக்கான நடைப்பயணம்” மேற்கொண்டது. இரண்டுமே பின்னர் அமைக்கப்பட்டன.

மகாத்மா காந்தி (இடம்), மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்றோர் நடத்திய அமைதி ஊர்வலங்கள், அடக்குமுறை  சட்டங்களையும் கொள்கைகளையும் அரசுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன.

இதில் முரண்நகை என்னவென்றால்- நம் நாடு உருவாகக் எந்த ஊர்வலங்கள் காரணமாக இருந்தனவோ அதே ஊர்வலங்களுக்கு அரசாங்கம் தடை விதிக்க விரும்புகிறது. பிரதமர் உறுதிகூறிய சீரமைப்புகளைத் தடுக்கப் பார்க்கிறது. ஆர்ப்பாட்டங்களின் பயனாக உறுதிகூறப்பட்ட சீரமைப்புகள் அந்த ஆர்ப்பாட்டங்களையே திருப்பித் தாக்குகின்றன.

அந்தச் சட்ட முன்வரைவு அதன் இப்போதைய வடிவத்தில் சட்டமாகக் கூடாது என்பதில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் உறுதியாக உள்ளது. கூட்டரசு அரசமைப்பில் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள ஓர் அடிப்படை உரிமையை முறைப்படுத்த எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளும் முன்னர், மாற்றரசுக் கட்சி எம்பிகள், சமூக அமைப்புகள் உள்பட சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்பதில் மலேசிய வழக்குரைஞர் மன்றம் தீர்மானமாக உள்ளது.

இதன் தொடர்பில், மாற்று யோசனை ஒன்றை வழக்குரைஞர் மன்றம் முன்வைத்துள்ளது.அந்தச் சட்டமுன்வரைவை நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒன்றின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதுதான் அது. செனட்டராகிய நீங்கள் அது இரண்டாம் வாசிப்புக்கு வரும்போது எங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மக்களின் சுதந்திரம் இப்போது உங்கள் கைகளில் என்றால் அது மிகையாகாது. அதற்கு உரிய மதிப்பளித்து கவனிக்க வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.மக்களின் பிரதிநிதியாகத்தான்  நீங்கள் ஒரு செனட்டராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை முன் எப்போதையும்விட இப்போது நீங்கள் நினைவுபடுத்திக்கொள்வது முக்கியம்.

மக்கள் சேவையைவிட கண்மூடித்தனமாக கட்சிக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே மேல் என்ற நினைப்பு கூடாது. கட்சி அரசியலின் காரணமாக மக்கள் இன்னலுறக் கூடாது. இச்சட்ட முன்வரைவை ஒரு நியாயமற்ற சட்டமாக உருவாக்க அவசரம் காட்டப்படுகிறது. மக்கள் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

எனவே சட்ட முன்வரைவை ஏற்காதீர்கள். எங்கள் மாற்று யோசனையை, அதை நாடாளுமன்றத் தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்ற எங்களின் அறைகூவலை ஆதரியுங்கள்.

தங்கள் நம்பிக்கைக்குரிய
லிம் சீ வீ,
தலைவர்
மலேசிய வழக்குரைஞர் மன்றம்