தைவான் நீரிணைக்குள் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் – “அனைத்துலகச் சட்டங்களைப் பின்பற்றினோம்”

தைவான் நீரிணைக்குள் அமெரிக்கப் போர்க் கப்பல்கள் சென்றது, அனைத்துலகச் சட்டங்களின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) தைவானுக்குச் சென்றதை அடுத்து அமெரிக்கா முதன்முறையாக அந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.

USS Antietam, USS Chancellorsville எனும் 2 போர்க் கப்பல்களைத் தைவான் நீரிணைக்குக் கொண்டுசெல்லவேண்டும் என்று வெகுநாளுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு மன்றப் பேச்சாளர் ஜான் கிர்பி (John Kirby) குறிப்பிட்டார்.அமெரிக்காவின் கடற்படை அனைத்துலகச் சட்டங்களை மீறாமல் எங்கே வேண்டுமானாலும் பயணம் மேற்கொள்ளும் என்பதை அது காட்டுவதாக அவர் கூறினார்.

சீனா அந்த 2 கப்பல்களையும் கண்காணித்து வருவதாக அதன் ராணுவம் தெரிவித்தது.எந்தத் தூண்டுதல் நடவடிக்கையையும் தோற்கடிக்க அதன் துருப்புகள் தயார் என்றும் அது கூறியது.

தைவான் நீரிணையில் போர்க்கப்பல்கள் செல்வது, அமெரிக்காவின் ஒரே சீனா கொள்கைக்குக் கட்டுப்பட்டதே என்று திரு. கிர்பி குறிப்பிட்டார்.இந்தோ-பசிபிக் வட்டாரத்தைத் தடைகள் இன்றி வைத்திருக்க அமெரிக்காவின் கடப்பாட்டை அது காட்டுவதாக அவர் சொன்னார்.

 

-smc