அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் விசாரணை ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றது முதல் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது.
இதில் அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் சிலவற்றை நீக்குவதாகவும் அமெரிக்கா கூறி உள்ளது.
இந்நிலையில், உலக வல்லரசுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுக்கவேண்டுமானால், அறிவிக்கப்படாத அணுசக்தி தளங்களில் யுரேனிய தடயங்கள் தொடர்பான விசாரணையை சர்வதேச ஆய்வாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி கூறி உள்ளார். அறிவிக்கப்படாத தளங்களில் காணப்படும் யுரேனிய தடயங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி ஈரானை சர்வதேச அணுசக்தி ஏஜென்சி வலியுறுத்துகிறது.
மேலும், ஈரான் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அணு ஆயுத திட்டத்தை 2003 வரை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்புகள், மேற்கத்திய நாடுகள் மற்றும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி ஆகியவை கூறியுள்ளன. ஆனால், அணு ஆயுத குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
-mm