மருத்துவமனையில் நஜிப் – உடல்நிலை சீராக உள்ளது

முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் (HKL) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை அவரின் அதிகாரிகள் உறுதி செய்தனர். தற்சமயம்  அவரது உடல்நிலையின் தன்மை தெரியவில்லை, ஆனால் அவர் நிலையான வகையில் இருப்பதாக அறியப்பட்டது.

“அவர் இன்னும் எச்.கே.எல்-லில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறை மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் ஒத்துழைப்பிற்காக நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்,” என்று நஜிப்பின் சிறப்பு அதிகாரி முகமட் முக்லிஸ் மக்ரிபி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

அதிகார துஷ்பிரயோகம், கிரிமினல் நம்பிக்கை மீறல் மற்றும் பணமோசடி ஆகிய குற்றங்களுக்காக 12 வருட சிறைத்தண்டனையை ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் அந்த போஸ்-கு என்ற பெக்கான் எம்பி அனுபவிக்கத் தொடங்கினார்.

நஜிப் பிரதமராக இருந்தபோது SRC இன்டர்நேஷனல் Sdn Bhd என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து 42 மில்லியன் ரிங்கிட் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

நஜிப்பின் கண்காணிப்பின் கீழ், SRC இன்டர்நேஷனல், தேசிய ஓய்வூதிய நிதி அமைப்பிலிருந்து (க்வாப்) ரிம 40 கோடியை கடனைப் பெற்றது. அதை  மூலோபாய (நவீன நிலைமைகளில்) வகையில் முதலீடு செய்ய வேண்டும். இதுவரை அவர்களின் முதலீட்டு நடவடிக்கைகளின் முடிவுகள் தெரியவில்லை.

அம்னோ தலைவரான நஜிப் தனக்கு நியாயமான விசாரணை வழங்கப்படவில்லை என்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழி கொள்ளையடித்தது மற்றவர்களின் செயல் என்றும் வாதாடினார்.