இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தேர்வு

ரிஷி சுனக், லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட லிஸ் டிரஸ் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2-ம் தேதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர்.

வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

-mm