ஆப்கானிஸ்தானில் ரஷிய தூதரகம் அருகே குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் 2 தூதரக அதிகாரிகள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகரில் இருந்து தென்மேற்கில் ரஷிய தூதரகம் அமைந்த பகுதியருகே தருலாமன் சாலையில் இன்று காலை 11 மணி அளவில் திடீரென குண்டு வெடித்தது.
தூதரகத்திற்கு வெளியே விசாக்களைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த மக்களில் பலர் பலியாகி இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்பில் 2 ரஷிய தூதர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர் என ரஷிய அரசு தொடர்புடைய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷிய தூதரகத்தில் தாக்குதல் நடத்துவதற்கு வந்த அடையாளம் தெரியாத பயங்கரவாதியை கண்டறிந்த பாதுகாவலர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தானில் வடமேற்கு பகுதியில் வெள்ளிக்கிழமை மசூதியில் நடந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-mm