இராகவன் கருப்பையா – கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் 1MDB ஊழல் தொடர்பான சர்ச்சை முக்கியப் பங்காற்றியது என்பது நாடறியும். இன்னும் சொல்லப் போனால் பாரிசான் வீழ்ந்ததற்கு அந்த ஒரு விவகாரம்தான் பிரதானக் காரணமாக இருந்தது.
முன்னாள் பிரதமர் நஜிப்தான் அதற்குக் காரணகர்த்தா என்பது வெட்ட வெளிச்சம் எனும் போதிலும் அவருக்கு வெறித்தனமாக ஆதரவளிக்கும் அம்னோவைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர் இனமும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.
இனவாதமிக்க அரசியல் சூழ்ச்சியால் புதிய அரசாங்கம் குறுகிய காலம் மட்டுமே தூய ஆட்சியை நாட்டிற்கு வழங்க முடிந்தது சரித்திரம்.
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய 22 மாதங்கள் நாட்டை ஆண்ட பிறகு கொல்லைப்புறமாக நுழைந்த சில சுயநல அரசியல் தவளைகளிடம் ஆட்சியை இழந்த பக்காத்தான் ஹராப்பான், மீண்டும் அரியணையைக் கைப்பற்ற இப்போதுதான் சரியான தருணம் என்று கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களாக ஒன்னு பின் ஒன்றாக நாட்டில் நிகழ்ந்து வரும் நடப்புகள், குறிப்பாக அம்னோ தலைவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளின் நிலைப்பாடு இதற்குச் சான்று.
நஜிப் சிறையில் அடைக்கப்பட்ட போது நீதித்துறைக்குத் தலை வணங்கி அம்னோவைச் சேர்ந்த எல்லாரும் வாய் மூடி பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாட்டின் சட்டதிட்டமே தங்களுடைய காலடியில்தான் எனும் தோரணையில் அக்கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் ‘ஹீரோ’க்களைப் போல நீதித்துறையை தாழ்த்தி அறிக்கை விட்டது அவர்களுடைய நிலையை மோசமாக்கியுள்ளது.
நஜிப் சிறை சென்ற விவகாரம் தொடர்பான சூடு தணிவதற்குள் அவருடைய மனைவி ரோஸ்மாவும் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார் எனும் குற்றச்சாட்டை நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியது.
970 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையோடு கூடியபட்சச் சிறைத் தண்டனையான 20 ஆண்டுகள் வழங்கப்படாமல் 10 ஆண்டுகள் மட்டுமே சிறை என அறிவிக்கப்பட்டது.
எனினும் இந்தத் தளர்வைச் சாதகமாக ஏற்றுக் கொள்ளத் தெரியாத அதே கும்பல் நீதித் துறையை மேலும் சாடி கட்சிக்கு தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து சபாவின் துணை முதல்வர் புங் மொக்தார், அவருடைய மனைவி ஸிஸி, மற்றும் பாலிங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஸிஸ் ஆகிய எல்லாருமே தங்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தற்காப்பு வாதம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வரலாறு காணாத அம்னோவின் பின்னடைவை
இதற்கிடையே அம்னோ தலைவர் அஹ்மட் ஸாஹிட்டுக்கு எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 15ஆம் தேதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு காணாத அளவுக்கு அம்னோவிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள இந்த ஊழல் வழக்குகள் அக்கட்சியின் மூத்த தலைவர்களைக் கலக்கமடையச் செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
பக்காத்தானுக்கு இது ஒரு சாதகமான சூழலை கொண்டு வந்துள்ளது என்ற போதிலும் அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு எவ்வகையில் அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதே தற்போதைய கேள்விக்குறி.
இந்நாட்டில் தேர்தல் என்றாலே இனவாதத்திற்கு அதிக அளவில் உரமூட்டும் தருணம் என்பது ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள ஒரு கலாச்சாரம்.
இம்முறை அந்த விஷத்தன்மை மேலும் தீவீரமாகத் தலைவிரித்தாடுவதற்கான அறிகுறிகள் அதிகமாக உள்ளன என்பதையும் அண்மைய அரசியல் நகர்வுகள் புலப்படுத்துகின்றன.
கடந்த பொதுத் தேர்தலில் பெர்சத்து எனும் மலாய்க்காரக் கட்சியைக் களமிறக்கிய முன்னாள் பிரதமர் மகாதீர் இம்முறை பெஜுவாங் எனும் மற்றொரு இனவாதக் கட்சி மட்டுமின்றி ‘கெராக்கான் தானா ஆயர்’ என்றொரு மலாய்க்காரக் கூட்டணியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பாரிசானை எடுத்துக் கொண்டால் மூவினத்தையும் உள்ளடக்கிய ஒரு கூட்டணிதான் அது என்ற போதிலும் தீபகற்ப மலேசியாவில் ம.சீ.ச.வையும் ம.இ.கா.வையும் ஒப்புக்காகத்தான் அம்னோ அரவணைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
வலுவிழந்துள்ள அவ்விரு கட்சிகளையும் சற்றும் பொருட்படுத்தாமல் தனது இனவாத அரசியலை அம்னோ மிகத் தாராளமாகவே கடைபிடித்து வருகிறது.
மதவாதத்தையும் புகுத்தும் பாஸ் கட்சி
இவற்றுக்கிடையே இனவாதம் மட்டுமின்றி மதவாதத்தையும் புகுத்தும் பாஸ் கட்சியும் இம்முறை மிகுந்த உற்சாகத்தோடும் நிறையக் கனவுகளோடும் காணப்படுகிறது.
ஆக எதிர்வரும் தேர்தலில் ஏந்தம்பக்கம் திரும்பினாலும் இனவாதக் கட்சிகளைத்தான் பக்காத்தான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அக்கூட்டணியில் பி.கே.ஆர்., ஜ.செ.க. மற்றும் அப்கோ, ஆகிய 3 பல்லினக் கட்சிகளோடு அமானா எனும் மலாய்க்காரக் கட்சியும் அங்கம் வகிக்கிறது. இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரங்களின் போது பக்காதானுக்கு எதிராகத் தீவிர இனவாதத்தை முன்வைத்துத்தான் மற்ற கட்சிகள் காய்களை நகர்த்துகின்றன.
எனவே அம்னோவுக்கு எதிராகச் சாதகமான சூழல் நிலவுகிற போதிலும் இனவாதம் எனும் அரக்கனை முறியடிப்பது மட்டுமின்றித் தேர்தல் நெருங்கும் வேளையில் அமையக் கூடிய கூட்டணியைப் பொருத்தும் உள்ளது பக்காதானின் வெற்றி.