‘பொருளியல் நெருக்கடியைக் கடப்போம்’ – புதிய அமைச்சரவையை அறிவித்த இங்கிலாந்து பிரதமர்

பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அவரின் அமைச்சரவையை அறிவித்துள்ளார்.

புதிய மாற்றங்களின்படி, வர்த்தக, எரிசக்தி அமைச்சர் குவாசி குவார்டெங் (Kwasi Kwarteng) நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் நிதியமைச்சராவது இதுவே முதன்முறை.

கடந்த ஜூலை மாதத்திலிருந்து கல்வியமைச்சராகச் செயல்பட்ட
திரு. ஜேம்ஸ் கிளெவர்லி (James Cleverly) வெளியுறவு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தலைமைச் சட்ட அதிகாரியாகச் செயல்பட்ட சுவேலா பிரேவர்மன் (Suella Braverman) உள்துறை அமைச்சராகிறார்.

வேலை, ஓய்வூதியநல அமைச்சராகச் செயல்பட்ட  தெரேஸ் காஃபி (Therese Coffey) துணைப் பிரதமராகவும் சுகாதார அமைச்சராகவும் இனி செயல்படுவார்.பென் வாலஸ்(Ben Wallace) தற்காப்பு அமைச்சர் பதவியில் நீடிப்பார்.

இந்நிலையில் பிரிட்டன் பொருளியல் நெருக்கடியைக் கடந்துசென்றுவிடும் என்று திருவாட்டி லிஸ் டிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எரிசக்திக் கட்டணங்கள், எரிசக்தி விநியோகம் ஆகியவை குறித்து இவ்வாரம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் சொன்னார்.

எரிசக்திக் கட்டணங்களை மேலும் அதிகரிப்பதற்கு அவர் தடை விதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”புயல் எவ்வளவு வலுவாக வீசினாலும் பிரிட்டிஷ் மக்கள் அதைவிட பலசாலிகள் என்று எனக்குத் தெரியும்” எனத் திருவாட்டி டிரஸ் கூறினார்.

 

 

-smc