பாகிஸ்தானில் பெய்த கனமழைக்கு இதுவரை 1,300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கனமழை, வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட ஐ.நா. பொதுச்செயலாளர் பாகிஸ்தான் சென்றுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் தொடங்கிய பருவமழை தீவிரமடைந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டியது.
இதன் காரணமாக நாட்டில் பல்வேறு நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 3-ல் 1 பங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளதாக பாகிஸ்தான் பருவநிலைமாற்ற மந்திரி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளம் அது தொடர்பான இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 1,391 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம், கனமழை காரணமாக நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் அந்நாட்டுக்குச் சென்றுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்குகிறார். மேலும், உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-mm