ரஷியாவில் புதினை அதிபர் பதவியில் இருந்து அகற்ற கோரிய 5 அதிகாரிகள் கைது

கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. மாஸ்கோ நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட முயன்ற உக்ரைனின் நடவடிக்கை, ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதற்காக அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது. அந்தப் போர் இன்னும் நீடிக்கிறது. இதனால் உக்ரைன், ரஷியா மட்டுமல்ல உலக நாடுகள் பலவற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முடிவு எடுத்ததற்காக அதிபர் புதினை பதவியில் இருந்து அகற்ற வேண்டும், அவர் மீது தேசத்துரோக வழக்கு போட்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அங்குள்ள 5 அரசு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இது அங்கு பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. அதுவும் இந்த கோரிக்கை, புதினின் சொந்த ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் எழுந்துள்ளது.

இது தொடர்பாக அந்த அதிகாரிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

இதுபற்றி முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரெபேக்கோ கோப்ளர் கருத்து தெரிவிக்கையில், “புதினின் சொந்த ஊரில், அவர் தேசத்துரோகம் செய்ததாக குற்றம்சாட்டி, அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த கோரிக்கை விடுத்தவர்களுக்கு தங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் என்பது தெரியும். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில ரஷிய அதிகாரிகளின் இந்த மீறல் மற்றும் எதிர்ப்பின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது” என தெரிவித்தார்.

 

-mm