மஇகா தலைவர்களின் குரலுக்கு மதிப்பில்லையா? சார்ல்ஸ் கேள்வி

சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சியடைந்த இந்தியர்கள் பலருக்கு துணைக்கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் ஃபுவாட் ஸர்காஷி வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

கடந்த வெள்ளிகிழமை  சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவல் மீட்கப்பட்டுள்ளது என மஇகா தேசியத் தலைவர் ஜி.பழனிவேலும் அக்கட்சியின் தேசிய துணைத்தலைவரும் மனிதவளத் துறை அமைச்சருமான டாக்டர் சுப்ரமணியமும்  பகிரங்கமாக அறிவித்திருந்தனர்.

ஆனால் ‘இண்டேர்லோக் நாவல் உண்மையிலே மீட்கப்பட்டதா; இல்லையா? என்பது குறித்து கல்வியமைச்சர் மொகதீன் யாசின் அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்க வேண்டும்’ என முகமட் ஃபுவாட் கூறியிருப்பது, ஒட்டுமொத்த இந்தியர்களையும் மீண்டும் அவமானப்படுத்தும் செயல் என கூறுகிறார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

அப்படியானால், ஆளங்கட்சியிலிருந்துகொண்டு இந்திய சமூதாயத்தின் தலைவர்கள் என மார்தட்டிக் கொள்ளும் மஇகா தலைவர்களின் குரலுக்கு எந்த மதிப்பும் இல்லையா? இந்தியர்களின் பிரதிநிதிகளின் முடிவுக்கு அரசாங்கம் மதிப்பளிக்காதா? என அவர் வினவினார்.

ஆரம்பத்தில் இண்டர்லோக் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபோதே அந்நாவலை அரசாங்கம் மீட்டுக்கொண்டிருக்கவேண்டும். தாமதம் செய்தற்குக் காரணமே இல்லை. அந்த நாவலில் கூறப்பட்டுள்ள விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்தப் பிரச்னை எழுப்பப்பட்டதும் அது பள்ளிக்கூடப் பாடப் புத்தகத் திட்டத்திருந்து உடனடியாக மீட்டுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் எனவும் சார்ல்ஸ் கூறினார்.

ஆனால், தற்போது மீட்டுக் கொள்ளப்படும் எனக் கூறுவதும் பின்பு, துணைத் தலைமையமைச்சரின் அறிவிப்பிற்கு காத்திருக்க வேண்டும் என்பதும், மத்திய அரசாங்கத்தின் அரசியல் நாடகமே என்பதனை மக்கள் புரிந்து கொண்டு, வரும் பொதுத் தேர்தலில் தீர்க்க முடிவு எடுக்குமாறும் சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.

TAGS: