பங்களாதேஷில் பெரிய அளவில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் அரசாங்க மின்சாரப் பயனீட்டு நிறுவனம் தெரிவித்தது.
நாட்டின் 80 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பகுதிகள் திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையால் பாதிக்கப்பட்டன. பங்களாதேஷின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் சில இடங்களைத் தவிர, நாட்டின் மற்ற அனைத்து இடங்களும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மின்சாரத் தடை எதனால் ஏற்பட்டது என்பது குறித்துத் தெளிவான தகவல் ஏதும் இல்லை. அதன் தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டது. செயல்பாட்டுக் கோளாற்றால் மின்சாரத் தடை ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இவ்வாண்டு பிப்ரவரியில் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து, உலக அளவில் எரிசக்தி விலை அதிகரித்துள்ளது. அதன் காரணமாகக் கடந்த சில மாதங்களாக, பங்களாதேஷில் மின்சார நெருக்கடி உருவெடுத்துள்ளது.