ஹெயிட்டியில் காலரா நோய்ப்பரவல் கடுமையாகலாம்: ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை

கரீபிய நாடான ஹெயிட்டியில் காலரா (Cholera) நோய்ச்சம்பவங்கள் பெரிய அளவில் அதிகரிக்கக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

நாட்டின் முக்கிய எரிபொருள் இறக்குமதிகளைப் பெற்றுக்கொள்ள வகைசெய்யும் மனிதாபிமானப் பாதைகளை அமைத்துக்கொள்ளும்படி நிறுவனம் கேட்டுக்கொண்டது.

அதன் மூலம் ஹெயிட்டியில் சேவைகள் மீண்டும் தொடரலாம் என்றும் சுத்தமான நீர்வளங்கள் மக்களுக்குப் போய்ச்சேரலாம் என்றும் அது குறிப்பிட்டது.அங்கு இம்மாதம் (அக்டோபர் 2022)2ஆம் தேதி காலரா நோய்ப்பரவல் ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது. மூவாண்டுகளில் முதல்முறையாக ஹெயிட்டியில் காலரா நோய் பரவியுள்ளது. அதில் 7 பேர் மாண்டனர்.

அங்கு 11 பேருக்குக் காலரா நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 111 பேருக்கு அந்த நோய் இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தலைநகர் போர்ட்-ஆவ்-பிரின்ஸில் (Port-au-Prince) அந்தச் சம்பவங்கள் பதிவாயின. நாட்டில் நிலைமை மோசமாகலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் ஹெயிட்டிக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் உல்ரிக்கா ரிச்சர்ட்சன் (Ulrika Richardson) சொன்னார்.

 

 

 

-mm