அடுத்த பொதுத் தேர்தலில் பிஎன் பினாங்கு மாநிலத்தைக் கைப்பற்ற நினைத்தால், முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதி கூற வேண்டும் என்கிறது உத்துசான் மலேசியா.
“எல்லாரும் பினாங்கு முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டால் பினாங்கைத் திரும்பவும் கைப்பற்ற முடியும் என்று நம்புகிறேன்”, என்று அந்த மலாய் நாளேட்டின் சைனி ஹசன் பத்தியில் கூறப்பட்டிருந்தது.
இப்போது பினாங்கு சட்டமன்றத்தில் அம்னோ 11 இடங்களையும் பாஸ் ஓர் இடத்தையும் டிஏபி 19 இடங்களையும் பிகேஆர் ஒன்பது இடங்களையும் வைத்திருப்பதாக சைனி குறிப்பிட்டார்.
“எல்லாரும் (அம்னோ முதல்வர் பதவி வகிப்பதை) ஏற்றுக்கொண்டால் பிகேஆருக்குச் சென்ற மலாய் வாக்குகள் எல்லாம் திரும்பி வரும். அம்னோவும் பிஎன்னும் அம்மாநிலத்தை மீண்டும் ஆளும்.
“சிலர் இது பகல் கனவு, நடக்க முடியாதது, சீனர்கள் விடமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லக்கூடும்.ஆனால், அரசியலில் எதுவும் நடக்கலாம்”, என்றவர் வலியுறுத்தினார்.
கெராக்கான் தலைவரும் பினாங்கு பிஎன் தலைவருமான கோ சூ கூனையும் சைனி சாடினார். அண்மைக்காலமாக அவர் அதிகம் சத்தம் போட்டு வருவதாக அவர் கூறினார். அதே வேளை, மைய நீரோட்ட நாளேடுகள் ஒவ்வொரு நாளும் கோ-வைத் தாக்கிச் செய்திகள் வெளியிட்டு வருவது ஏன் என்பதையும் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
“பினாங்கு பிஎன் ஆரவாரம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் மாநிலத்தைத் திரும்பக் கைப்பற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை கொடுப்பவர் பினாங்கு முதல்வர் லிம் குவான் எங்தான். ஏன் எவரும் அவரைக் குறை சொல்வதில்லை? இப்போது முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பது பற்றி விவாதிக்க வேண்டும். ஏனென்றால் பினாங்கு சட்டமன்றத்தில் பிஎன் வைத்துள்ள அத்தனை இடங்களையும் கைப்பற்றியது அம்னோதான்.
“இந்த விசயத்தில் கெராக்கான் சத்தம் போட்டு பிரச்னை உண்டுபண்ணக்கூடாது. வாயைப் பொத்திகொண்டு தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும்”, என்று சைனி கூறினார்.