இந்திய அமைப்புகளின் 15ஆம் பொதுத் தேர்தலுக்கான கோரிக்கைகள்

‘இந்தியர்கள் 25’ (I25) என்ற இந்திய சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு 15 -வது பொதுத்தேர்தலை முன்னிட்டு இந்திய சமூக மேம்பாட்டுக்கான தேர்தல் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கை மனு அனைத்து அரசியல் தரப்பினர்களிடமும் சமர்பிக்கப்படும் என்று கூறுகிறார் இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குணசேகரன் கருப்பையா.

“எங்களின் நோக்கம் இந்திய சமூகம் எதிர்நோக்கும் சிக்கல்கள் அடிப்படையில், அரசியல் வழியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான்,” என்கிறார் குணா.

கோரிக்கைகளின் முழுவிபரம் வருமாறு :

அ. கல்வி

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தொடர்ந்து கட்டட வசதி, கற்றல் கற்பித்தலுக்கான வசதி மற்றும் கற்பித்தல் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக, கீழ்க்கண்ட கோரிக்கைகளைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்:-

  1. பள்ளி செயல்பாட்டு பிரிவின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கென ஒரு துணைப் பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
  2. பள்ளி மேம்பாட்டு பிரிவின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கென பள்ளி மேம்பாட்டு துணைப் பிரிவு நிறுவுதல்.  0
  3. பள்ளிகளுக்கான கொள்முதல் (Unit Perolehan) பிரிவின் கீழ் அரசு உதவி பெறும் பள்ளிக்களுக்கென துணைப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்.  
  4. தமிழ்ப்பள்ளிகளுக்கான நீண்ட கால செயல் திட்டத்தை மறு ஆய்வு செய்து அதனை அமல்படுத்த வேண்டும்.
  5.  B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கல்வி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தபட்சம் ஓர் ஆரம்ப தமிழ்ப்பள்ளியில் தங்குமிட வசதிகள் உருவாக்குதல். மேலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த பூமிபுத்ரா அல்லாத இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு இடைநிலைப் பள்ளிகளிலுள்ள மாணவர் விடுதிகளில் தங்குவதற்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
  6. இடைநிலை பள்ளிகளில் மாணவர்களின் தாய்மொழி வகுப்புகள் பள்ளி நேரங்களில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
  7. ஆறாம் ஆண்டு மதிப்பீட்டில், நிலை 3 மற்றும் அதற்குக் குறைவான அடைவுநிலைப் பெற்ற மாணவர்களை தங்கள் கல்வியைத் தொடர அடிப்படை தொழில் திறன் பள்ளிகளுக்கு அனுப்ப வழிவகைகளை உருவாக்க வேண்டும்.
  8.  பத்து சதவீத பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு முழு தங்கும் விடுதி வசதி பெற்ற பள்ளி மற்றும் மாரா இளநிலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
  9. குறைந்தது பத்து சதவீத இந்திய மாணவர்களுக்குத் தங்களின் கல்வியைத் தொடர பொது உயர் கல்வி நிலையங்களிலும் அரசாங்கத் தொழில் திறன் பயிற்சி நிறுவனங்களிலும் (ILKA) வாய்ப்பளிக்க வேண்டும

ஆ. B40 சார்ந்த சமூகத்தினர்

B40 சார்ந்த சமூகத்தினருக்கு அரசாங்கம் பல திட்டங்களைச் செயல்படுத்தி இருந்தாலும், அவற்றுள் சில முயற்சிகள் இன்னமும் அத்தரப்பினரால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆகவே, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

  1. சுகாதார காப்புறுதி திட்டத்தில் பெக்கா B40, மைசலாம், தெனாங் போன்ற காப்புறுதி திட்டங்கள் மற்றும் கொடிய நோய்களுக்கான காப்புறுதி திட்டத்தை B40 தரப்பினர்களுக்காக மேம்படுத்த வேண்டும். இத்திட்டத்தில் பங்குக் கொள்ள தகுதி கொண்டவர்களை அரசு தன்னிடம் இருக்கும் தரவுகளைக் கொண்டு பதிவு செய்ய வேண்டும்.
  2. முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கும் B40 தரப்பினர்களுக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொந்த வீடு வைத்திருக்கும் வகையில் சிறப்பு வீட்டுடைமைத் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்.

இ. சமூக கட்டமைப்பு 

ஆரம்பக் காலங்களில் மலேசியாவில் வாழ்ந்த இந்தியர்கள் பெரும்பாலோர் தோட்டப்புறங்களில் வசித்தனர். தோட்டப்புறங்களின் மேம்பாட்டின் காரணத்தால் அவர்களது வசிப்பிடம் மற்றும் ஏனைய தேவைகள் உதாரணமாக வழிப்பாட்டுத் தலங்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மயான நிலங்கள் ஆகியவற்றை இழந்தனர்.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதன் வழி அவர்கள் தங்களையும் தங்கள் குடும்பங்களையும் முன்னேற்றவும், மலேசிய குடும்பத்தில் ஓர் அங்கமாக நிம்மதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுகிறோம்.

  1. அதிக இந்துக்கள் வசிக்கும் ஒவ்வொரு குடியிருப்புப் பகுதிகளிலும் அவர்களுக்கென இந்து வழிப்பாட்டுத் தலங்கள், ஆரம்பத் தமிழ்ப்பள்ளி மற்றும் மயானத்திற்கான நிலம் இருப்பதை வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு மற்றும் நகராண்மைக் கழகம் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள் இது தொடர்பான ஆலோசனைகள் பெற இந்திய அரசு சார்பற்ற நிறுவனங்களை அணுக வேண்டும்.
  2. பிரதமர் துறையின் கீழ் இந்து அறக்கட்டளை மற்றும் இந்து மத சபையை நிறுவுதல்.
  3. கோவில்கள் அல்லது வழிபாட்டுத் தலங்கள், தேசிய பாரம்பரிய 2005-ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் பாரம்பரிய தளங்களாக அறிவிக்க வேண்டும்.
  4. ஏழு சதவீதம் மற்றும் அதற்கு மேற்பட்ட இந்தியர்களைக் கொண்ட மாநிலங்களில் இந்திய சமூகத்தின் கலாச்சாரம் மற்றும் மொழிக்கான மையங்களை நிறுவுதல்.
  5. மலேசிய கல்வித் தத்துவம் மற்றும் ருக்குன் நெகாராவின் படி ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் இந்து மாணவர்களுக்கு இந்து மத வகுப்புகளை ஏற்படுத்துதல்.

ஈ. வறுமையை ஒழிப்பது

மலேசிய இந்திய சமூகத்தில் கிட்டத்தட்ட 50 சதவீத குடும்பங்கள் இன்னும் வறுமை நிலையிலேயே உள்ளன என்று தரவுகள் காட்டுகின்றன. எனவே, “இன வேறுபாடுயின்றி வறுமையை ஒழிப்பது” என்பதை அதன் நோக்கங்களில் ஒன்றாகக் குறிப்பிடும் புதிய பொருளாதார கொள்கையின் (DEB) விருப்பத்திற்கு ஏற்ப அவர்களின் பொருளாதார நிலைமையை முன்னேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நோக்கத்திற்காக, அரசாங்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளைச் செயல்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது:-

  1.  ஃபெல்டா (FELDA) போன்ற விவசாய நில திட்டங்கள் B40 இந்திய குடும்பங்களுக்காக செயல்படுத்தப்பட வேண்டும்.
  2.  “TERAJU” போன்று மலேசிய இந்தியர்களுக்கான பொருளாதார மேம்பாட்டு மையத்தை நிறுவுதல்.
  3. இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்காக “பொது மற்றும்    தனியார் கூட்டு நிதியத்தை” நிறுவுதல்.
  4. பொதுத்துறை மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் (GLC) குறைந்தபட்சம்   ஏழு சதவீத வேலை வாய்ப்புகள் இந்தியர்களுக்காக வழங்கப்பட வேண்டும்.

உ. குடியுரிமை

இன்னாள் வரையில், குடியுரிமை மற்றும் அடையாள அட்டை விவகாரம் மலேசியர்கள் இடையே இருக்கும் முக்கிய சிக்கல்களுள் ஒன்றாக இருந்து வருகிறது. இன்று வரை அதற்கென கொள்கையளவில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, புதிய அரசாங்கம் இச்சிக்கலைத் தீர்ப்பதற்கு முக்கியதுவம் அளிக்கும் என்று மலேசியர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

15-ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமூக வாக்காளர்களின் உறுதியான ஆதரவைப் பெற விரும்பும் அரசியல் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்கும் போது மேற்கண்ட விஷயங்கள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கூறிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, தேசிய வளர்ச்சியின் நீரோட்டத்தில் தாங்கள் ஓரங்காட்டப்படுவதாக நினைக்கும் இந்திய சமூகத்தினரின் பார்வை மாற்றமடையும். தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்து நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவார்கள்.

 

– குணசேகரன் கருப்பையா,  ஒருங்கிணைப்பாளர்,இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியம் (i-25)