ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள்  – கி.சீலதாஸ்

பணத்திற்கு வாக்களிப்பதால்தான் ஊழல்வாதிகள் உருவாகிறார்கள். நாடு குட்டிச்சுவராகிறது. இலஞ்சம் வாங்காத நீதிபதியாக மக்கள் திகழ வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் -ஆர்

ஜனநாயகம் என்றால் மக்களின் ஆட்சி என்று பொருள். தங்களை ஆளுபவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொண்டிருப்பவர்கள் மக்கள். அந்த உரிமையை மக்கள் பயன்படுத்தும்போது எந்த ஒரு தவறான போக்கை யாரும் கையாளக்கூடாது என்பதை யாவரும் அறிந்திருந்தாலும் அந்த உண்மையான நல்ல எண்ணத்தை, நல்ல கொள்கையைக் கீழறுப்பதில்தான் கவனம் எல்லாம்.

ஜனநாயகம் மக்களின் நன்மையை, நாட்டின் நன்மையை அடிப்படையாகக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே அதன் தத்துவம், நோக்கம். மக்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்படிதான் நடக்கும் என்று நம்புகிறார்கள். அந்த நல்ல கொள்கைக்கு இடமளிக்கப்படுகிறதா, மதிப்பளிக்கப்படுகிறதா என்ற கேள்விகள் நம்மை நெருடாமல் இல்லை.

தேர்தலானது ஜனநாயகத்தில் மிகவும் முக்கியமான ஓர் அங்கம். அதனால்தான் தேர்தல் குறித்த சட்டங்கள் அரசமைப்புச் சட்டத்திலேயே பதிக்கப்பட்டுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தவறாது பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது அரசமைப்புச் சட்டம் சொல்லுகிறது.

ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்த அரசியல் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முயலுவது ஒன்றும் விசித்திரமல்ல. ஆட்சியின் சுவையை ஒரு முறை அல்லது பல முறை அனுபவித்தவர்கள் அதை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

ஆட்சியில் மீண்டும் அமர வேண்டும் என்ற வெறியில் தகாத வழிமுறைகளைக் கையாளுவார்கள் என்பதை அறியாத மக்கள் இல்லை. எனினும், அதைப் பொருட்படுத்தாது நடந்து கொள்ளும் மக்களைத்தான் காண்கிறோம்.

தேர்தல் காலத்தைப் பயன்படுத்தி ஆதாயம் காண விரும்புவோரின் எண்ணிக்கை கூடுவதும் இயல்பு. வறுமைக்கோட்டின் கீழ் இருக்கும் மக்கள் தங்களின் உடனடி பண தேவைகளைத் தீர்த்துக்கொள்ள தங்களின் வாக்குரிமையை விற்றுவிடுவதும் உண்டு.

ஆட்சியில் நெடுங்காலமாக அமர்ந்திருந்த கட்சியை ஆதரிக்கும் பொருட்டு பல சுயநலம் கொண்ட தொழிற் நிறுவனங்கள் நன்கொடை தருவதில் தயக்கம் காட்டா. இதை எல்லாம் கவனிக்கும்போது ஜனநாயகத்தின் உண்மையான பொருளைப் புரிந்துகொள்ளாதவர்களின் நிலைப்பாடு தலை விரித்தாடுகிறது.

இந்தக் காலகட்டத்தில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. புது கண்டுபிடிப்புகள் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன. அவ்வாறு சிந்திக்க முற்பட்டால் ஓர் உண்மை புலப்படும். அதாவது, ஜனநாயகம் வெறும் மக்களின் அங்கீகாரத்தைப் பெறும் செயல் என்பதோடு மேலும் ஒரு படி செல்கிறது. அதுதான் மக்களின் தீர்ப்பு.

இந்த மக்களின் தீர்ப்பை எவ்வாறு பெறுவது? மக்களின் தீர்ப்பு என்றால் என்ன? வாக்களிப்பது மக்களின் உரிமை. அந்த உரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும். அதைப் பயன்படுத்தும்போது எப்படிப்பட்ட தரம் தேவை? மக்களிடம் தீர்ப்பு கேட்கும்போது நீதிபதியிடம் தீர்ப்பு கேட்பது போல் இருப்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் நீதிபதியிடம் அப்பழுக்கற்ற, நியாயமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம். நீதிபதி தன் தீர்ப்பை வழங்கும்போது, நடந்த உண்மையை அறிய முற்படுவார். சாட்சியத்தைக் கூர்ந்து கவனிப்பார். சட்டத்தை அலசிப் பார்ப்பார். நியாயமான, தம் மனசாட்சிக்கு நியாயமாகப்படுவதை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்குவார்.

அதுதான் முறை. அது தான் நியாயம்! அதுதான் நேர்மையான, தூய்மையான நீதி. லஞ்சத்தைப் பெற்று அல்லது நல்ல அனுகூலங்கள் கிடைக்கும் என்ற காரணத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்கினால் அது நீதிக்குச் செய்யும் துரோகமாகும். நீதி பரிபாலனம் தூய்மையாக இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும். குற்றச்செயல்கள் குறையும் அல்லது கட்டுப்படுத்தும் அளவுக்குக் கொண்டு வரலாம்.

நீதிபதியின் நிலையை வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும். வாக்காளர்களின் பொறுப்பு என்ன? ஆட்சியிலிருந்த கட்சியின் நிர்வாகம் எப்படி இருந்தது? நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்தனவா அல்லது கட்டுக்கடங்காத அளவுக்குப் பெருகிவிட்டனவா?

எல்லா குடிமக்களுக்கும் நீதி கிடைத்ததா? நீதி பரிபாலனம் சீராக இருந்ததா? அது சீராகச் செயல்பட ஆட்சியில் இருந்த கட்சி மேற்கொண்ட அணுகுமுறை யாவும் நீதித்துறையின் சுதந்திரத்திற்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்து இருந்தனவா என்ற கேள்விகளை வாக்காளர்கள் ஆராய வேண்டும்.

நேர்மையான தீர்ப்பை வழங்க தயாராக வேண்டும். லஞ்சம் கொடுப்பதும் குற்றம், அதைப் பெறுவதும் குற்றம். எனவே, வாக்காளர்கள் ஒரு நீதிபதியின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்று விழைவது தவறல்ல. நீதிபதி லஞ்சத்தை நினைத்துச் செயல்படக்கூடாது என்பது போன்று மக்கள் நீதிபதிகள் போல் தீர்ப்பளிக்கும்போது லஞ்சத்தைப் பற்றி நினைக்கலாமா?

வாக்காளர்களின் தீர்ப்பு மிகவும் முக்கியமானது. நீதிபதியால் ஒரு வழக்கில் வழங்கப்படும் தீர்ப்பு ஒருவரையோ அல்லது இருவரையோ அல்லது ஒரு சிலரைப் பாதிக்கலாம். ஆனால், மக்கள் தங்களின் வாக்குரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்கும் தீர்ப்பு நாட்டைப் பாதிக்கும். எல்லா மக்களையும் பாதிக்கும். இந்த உண்மையை வாக்காளர்கள் உணர்ந்து செயல்பட வேண்டிய காலம் வந்துவிட்டது.

லஞ்சம் வாங்கும் நீதிபதி குற்றவாளி. லஞ்சம் கொடுத்தவரும் குற்றவாளி. அதுபோலவே, வாக்குகளுக்காக லஞ்சப் பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் குற்றவாளிகளே! லஞ்சம் பெறும் வாக்காளர்களும் குற்றவாளிகளே!

நாணயமற்ற, அதிகார வெறி பிடித்த அரசியல்வாதிகள் நடமாடும்போது தேர்தலில் லஞ்சத்தைத் தவிர்க்க முடியாது என்று சொல்பவர்களும் உண்டு. அதை நியாயப்படுத்துவோரும் உண்டு. அவர்களையும் அந்த உழல்வாதிகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்வதுதான் முறை.

இந்த இழிவான தேர்தல் கால ஊழலை ஒழிப்பது அல்லது தடுப்பது எப்படி என நெடுங்காலமாகவே நான் சிந்தித்தது உண்டு. இன்றும் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

வாக்குரிமையின் மகத்துவத்தை உணராத மக்கள் இருக்கும் வரை தேர்தலில் ஊழல் கண்டிப்பாகப் பரவலாக இருக்கும். பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவது குற்றமெனச் சட்டம் சொன்னாலும் அதைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை குறைவே. ஆட்சியில் இருக்கும் கட்சியே ஊழலுக்குக் காரணியாக இருந்தால் என்ன செய்வது?

ஊழலை ஒழிக்க முடியுமா? இந்தக் காலத்தில் ஊழல் செய்பவர்களைக் கொடுமையானவர்கள் என்றால் பணத்தைப் பெற்றுக் கொண்டு வாக்குகளைக் கொடுப்பவர்கள் ஊழல் செய்பவர்களை விட மிகவும் கொடுமையானவர்கள் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. நீதிபதி லஞ்சம் வாங்கினால் அது பெறும் கொடுமை அல்லவா?

தேர்தல் பிரச்சார முறையில் மாற்றம் தேவை. இது விஞ்ஞான காலம். செய்தியை எளிதில் பரப்புவதற்கு விஞ்ஞான கருவிகள் வந்துவிட்டன. உலகமே நம் கைவிரல்களில் இருக்கிறது.

நீதிபதியை நேரில் பார்த்து தமது வழக்கைப் பற்றி சொல்லுவது தகாத காரியமல்லவா? அதுபோலவே வாக்காளர்கள் நீதிபதிகளை வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் சந்திப்பது முறையல்லவே.

ஒவ்வொரு வேட்பாளரும் தமது வாதத்தை, தொலைப்பேசி வழியாக அல்லது வானொலி, தொலைக்காட்சி வழியாக முன்வைக்கலாம். இது போதாது என்றால் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாட்டில், மேற்பார்வையில் வேட்பாளர்கள் பொதுக் கூட்டம் நடத்தலாம்.

அந்தக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய தணிக்கை நிறுவனங்களை நியமிக்கலாம். அதற்கான செலவை வேட்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஏற்பாட்டை பண பலம் கொண்ட அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ள மாட்டா. வழக்கை விசாரிக்கும் நீதிபதியை அணுகுவது முறைகேடு என்றால் வாக்காளர் – நீதிபதிகளை அணுகுவது எந்த வகையில் நியாயமாகும்?

தேர்தலில் ஊழல் நடக்கக்கூடாது. அதைத் தடுக்கும் சட்டம் இருக்கிறதே தவிர அதன் அமலாக்கம் கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஊழல் செய்வதில்தான் நாட்டமே அன்றி, நேர்மையில் அல்ல. ஒரு புது முறை அல்லது கண்டிப்பான அமலாக்கம் வரும் வரையில் மக்கள்தான் தேர்தலில் நீதி பரிபாலனத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

அதாவது ஊழலுக்கு இடமளிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இதன்வழியாக மலேசியாவைக் காப்பாற்றலாம்.