‘சீனாவுடன் புதிய கெடுபிடிப் போர் ஏற்படாது’ – அதிபர் பைடன் வாக்குறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீனாவுடன் புதிய கெடுபிடிப் போர் ஏற்படாது என்று வாக்குறுதி அளித்துள்ளார். சீன அதிபர் சி சின்பிங் உடனான சமரசக் கலந்துரையாடலை அடுத்து திரு. பைடனின் கருத்து வெளிவந்துள்ளது.

சீனா தைவான் மீது படையெடுக்கும் என்று தாம் நம்பவில்லை என்றும் திரு. பைடன் குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான விவகாரங்களுக்குத் தீர்வு காண உச்சநிலை கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

அதை முன்னிட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூடிய விரைவில் சீனாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று திரு. பைடன் சொன்னார். தைவான் தொடர்பான தமது கொள்கை மாறவில்லை என்றார் அவர்.

தைவானைச் சீனா தாக்கினால் அமெரிக்கா அதைத் தற்காக்கும் என்று ஏற்கனவே திரு. பைடன் பல முறை கூறியிருக்கிறார். G20 உச்சநிலை மாநாட்டுக்கு முன் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தனர்.

அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு திரு. பைடன் திரு. சீயை நேரடியாகச் சந்திப்பது இதுவே முதன்முறை. ஏறக்குறைய 3 மணிநேர கலந்துரையாடலில் வடகொரியாவின் அணுவாயுதச் சோதனை, ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்பு ஆகிய பல்வேறு தலைப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

 

 

-mm