“சீனா COVID-19 நோய்ப்பரவலைக் கையாள வேறு உத்தியைப் பயன்படுத்த வேண்டும்” – அமெரிக்க அதிகாரிகள்

சீனாவில் கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பல மூத்த அமெரிக்க அதிகாரிகள் கருத்துரைத்திருக்கின்றனர்.

கிருமிப்பரவலைத் துடைத்தொழிப்பதற்கு வேறு உத்தியைப் பயன்படுத்துமாறு வெள்ளை மாளிகையின் கோவிட் நோய்த்தடுப்பு ஒருங்கிணைப்பாளர் ஆஷிஷ் ஜா (Ashish Jha) பெய்ச்சிங்கை வலியுறுத்தினார். கிருமிப்பரவலை முற்றாகத் துடைத்தொழிக்கும் அணுகுமுறையைச் சீனா கட்டிக்காப்பது கடினம் எனத் தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மருத்துவ ஆலோசகர் ஆன்ட்டனி ஃபௌச்சியும் (Anthony Fauci) தமது கருத்துகளை முன்வைத்தார்.

சீனாவின் அணுகுமுறை மிகக் கடுமையானது என்று அவர் NBC செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

எந்த முடிவும் இல்லாமல் சீனா தொடந்து முடக்கநிலைகளை அறிவிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்புமருந்துகள், Moderna, Pfizer, Johnson and Johnson ஆகியவற்றின் மருந்துகளைக் காட்டிலும் செயல்திறன் குன்றியவை என்று திரு. ஃபௌச்சி தெரிவித்தார்.

சீனா அதன் பொருளியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க எந்த நல்ல உத்தியையும் கொண்டிருக்கவில்லை என்று அவர் கூறினார்.

 

 

-smc