இரண்டரை ஆண்டுகளாக உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளில் பல அலைகளாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது.
கடும் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதற்கிடையே, மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.
அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.
கிழக்கு பீஜிங் நகரில் லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர். மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி உள்ளது.
-mm